ADDED : ஆக 08, 2024 10:43 PM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் பேரூராட்சி பஜார், வடக்கூர், கீழ ரதவீதி, கிழக்குத் தெரு, கடலாடி ரோடு, வீரமாகாளி அம்மன் கோயில் தெரு, நடுத்தெரு, அய்யனார் கோயில் தெரு உட்பட பல்வேறு தெருக்களில் 10க்கும் மேற்பட்ட நாய்கள் கூட்டமாக உலா வருகின்றன.
இதனால் பொதுமக்கள்,சிறுவர்கள் அச்சம்அடைகின்றனர். அதுமட்டுமின்றி ரோட்டில் உலாவரும் நாய்களால் டூவீலர் விபத்து ஏற்படுகிறது. இரவு நேரத்தில்பொதுமக்கள் நடந்து செல்வதற்கு முகம் சுளிக்கின்றனர். பள்ளி மாணவர்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது.
வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகளை நாய்கள் கடிக்கின்றன. கடந்த இரண்டு மாதத்திற்கு முன் முதுகுளத்துாரை சுற்றியுள்ள பகுதிகளில் நாய் கடித்ததில் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். முதுகுளத்துார் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
*திருவாடானை, தொண்டி பகுதியில் பஸ் ஸ்டாண்ட், மீன் மார்க்கெட் பகுதிகளில் கூட்டமாக சண்டையிடும் நாய்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ரோட்டோரம் குப்பையை கிளறும் நாய்கள் அவ்வழியாக செல்வோரை துரத்துகின்றன.
வெளியூர்களுக்கு சென்றுவிட்டு இரவில் பஸ்ஸ்டாண்டில் இறங்கி வீட்டிற்கு செல்வோரை நாய்கள் துரத்துவதால் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக கைக்குழந்தையுடன் பெண்கள் நடந்து செல்லும் போது விரட்டுவதால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.