/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷனில் பருப்பு வழங்காததால் மக்கள் புகார்
/
ரேஷனில் பருப்பு வழங்காததால் மக்கள் புகார்
ADDED : ஆக 28, 2024 04:06 AM
திருவாடானை : ரேஷன் கடைகளில் மாதந்தோறும் வழங்கப்படும் பாமாயில், துவரம் பருப்பு வழங்காததால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
திருவாடானை தாலுகாவில் 85 ரேஷன் கடைகளும், 39 ஆயிரத்து 600 ரேஷன் கார்டுதாரர்களும் உள்ளனர். கடந்த இரு மாதங்களாக பல ரேஷன் கடைகளில் பாமாயில் மற்றும் பருப்பு வழங்கவில்லை. இதனால் ரேஷன் கடையில் விநியோகம் செய்யப்படும் பொருள்களை மட்டும் வாங்கி பயன்பெறும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் மக்கள் கூறியதாவது: எஸ்.பி.பட்டினத்தில் 1200 ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளனர். இங்கு தினக்கூலி மற்றும் 100 நாள் வேலை திட்டத்தை நம்பி பெரும்பாலான மக்கள் வாழ்க்கை நடத்துகின்றனர்.
தினக்கூலி வேலைகளும் பெருமளவு இல்லாத காரணத்தால் பொருளாதார இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது.
இந்நிலையில் ரேஷனில் வழங்கபடும் அத்தியாவசிய பொருட்களான பாமாயில் மற்றும் துவரம் பருப்பு கிடைக்கவில்லை. அருகில் உள்ள புல்லக்கடம்பன் ஊராட்சியில் பாமாயில், பருப்பு வழங்கபட்ட நிலையில் எஸ்.பி.பட்டினத்தில் வழங்காதது கவலையாக உள்ளது என்றனர்.
திருவாடானை சிவில் சப்ளை அலுவலர் பாலமுருகன் கூறுகையில், தாலுகாவிற்கு 50 சதவீதம் கடைகளுக்கு மட்டுமே பாமாயில், பருப்பு வழங்கப்பட்டது. மீதமுள்ள கடைகளுக்கு வழங்கவில்லை.
சப்ளை வந்தவுடன் அனைத்து கடைகளுக்கும் அனுப்பி வைத்து கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் என்றார்.