/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஐந்து இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்க திட்டம்
/
ஐந்து இடங்களில் தானியங்கி மழைமானி அமைக்க திட்டம்
ADDED : மே 19, 2024 03:59 AM
திருவாடானை, : திருவாடானை தாலுகாவில் ஐந்து இடங்களில் தானியங்கி மழை மானி அமைக்கப்படவுள்ளது.
திருவாடானை, தொண்டி பகுதிகளில் பெய்யும் மழைப்பொழிவை கணக்கிடும் வகையில் தாலுகா அலுவலகம், வட்டாணம், தீர்த்தாண்டதானம், தொண்டி ஆகிய ஊர்களில் மழை அளவீடு கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றில் குடுவை வாயிலாக மழை அளவு கணக்கீடு செய்யப்படுகிறது.
இந்நிலையில் கூடுதலாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் இத் தாலுகாவில் ஐந்து இடங்களை தேர்வு செய்து தானியங்கி மழை மானி அமைக்கப்படுகிறது.
இது குறித்து தாசில்தார் கார்த்திகேயன் கூறியதாவது:
தாலுகாவில் புல்லுார், மங்களக்குடி, கருங்காலக்குடி, செக்காந்திடல், திருவாடானை ஆகிய கிராமங்களில் தானியங்கி மழை மானி அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தானியங்கி மழை மானி பொருத்தப்பட்டால் மழை விபரங்கள், வானிலை முன்னறிவிப்புகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
வெப்பநிலை, குளிர் போன்ற தகவல்களும் கிடைக்கும். தற்போது, கம்பி வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மட்டும் நடக்கிறது. விரைவில் அதற்கான இயந்திரங்கள் அமைக்கப்படும் என்றார்.

