/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாணவர்கள் பட்டம் பெற்றவுடன் புத்தகம் படிப்பதை நிறுத்தக்கூடாது பிரேம்ஆனந்த் சேதுராஜன் அறிவுரை
/
மாணவர்கள் பட்டம் பெற்றவுடன் புத்தகம் படிப்பதை நிறுத்தக்கூடாது பிரேம்ஆனந்த் சேதுராஜன் அறிவுரை
மாணவர்கள் பட்டம் பெற்றவுடன் புத்தகம் படிப்பதை நிறுத்தக்கூடாது பிரேம்ஆனந்த் சேதுராஜன் அறிவுரை
மாணவர்கள் பட்டம் பெற்றவுடன் புத்தகம் படிப்பதை நிறுத்தக்கூடாது பிரேம்ஆனந்த் சேதுராஜன் அறிவுரை
ADDED : மார் 02, 2025 05:46 AM

ராமநாதபுரம்: -பட்டம் பெற்றவுடன் மாணவர்கள் படிப்பதை நிறுத்திவிடக் கூடாது தொடர்ந்து புத்தகங்களை படிக்க வேண்டும் என்று எல்.எம்.இ.எஸ் அகாடமி நிறுவனர் பிரேம்ஆனந்த் சேதுராஜன் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லுாரியின் 23வது பட்டமளிப்பு விழா நடந்தது.
தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமை வகித்தார். செய்யது அம்மாள் கலை அறிவியல் கல்லுாரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா, செய்யது அம்மாள் அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் ராசிகா அப்துல்லா, டாக்டர் அட்டிப் அப்துல்லா முன்னிலை வகித்தனர். முதல்வர் பெரியசாமி வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முன்னாள் மாணவரும் எல்.எம்.இ.எஸ். அகாடமி நிறுவனருமான பிரேம் ஆனந்த் சேதுராஜன் மாணவர்களுக்கு இளங்கலை, முதுகலை, பொறியியல் பட்டங்களை வழங்கியும், அதிக மதிப்பெண் பெற்ற 6 மாணவர்களுக்கு தங்கப்பதக்கங்களை வழங்கினார். அவர் பேசியதாவது:
பட்டம் பெற்ற பட்டதாரி மாணவர்களுக்கு இனிமேல் தான் வாழ்க்கை துவங்குகிறது.
மாணவர்கள் தங்கள் கனவுகளுக்கு ஏற்ப வேலை கிடைக்கவில்லை என்றால் அதற்கான காரணங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
நம்மிடம் எதிர்பார்த்த எந்த திறன் இல்லை என்பதை கண்டறிந்து அந்த திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
மொழி ஆற்றலை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தாலும் தகவல் தொடர்பு திறமை இருந்தால் மட்டுமே வேலை வாய்ப்புகளை பெற முடியும். செயற்கை நுண்ணறிவு, சாட் ஜிபிடி போன்ற செயலிகளை பயன்படுத்தி உங்களது மொழி ஆற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தொழில் துறையில் வருங்காலத்தில் என்ன தேவை என்பதை அறிந்து அந்த பாடங்களை தேர்வு செய்து படிக்க வேண்டும். தற்போது செயற்கை நுண்ணறிவுக்கு அதிக தேவை உள்ளது. இந்த துறையை மாணவர்கள் தேர்வு செய்து படித்தால் எதிர்காலம் உள்ளது.
வேலை வாய்ப்பு கிடைத்தவர்கள் கடிவாளம் போட்டது போல் தங்களது வேலையை மட்டும் செய்தால் போதாது. அந்த வேலையின் நோக்கம், பயன்பாடு என்ன, அதை பயன்படுத்துபவர்களின் தேவை என்ன என்பதை அறிந்து அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்கு உதவும் வகையில் பணிபுரிய வேண்டும்.
மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்தவுடன் படிப்பு முடிந்து விட்டது என நினைக்காமல் தொடர்ந்து புத்தகங்களை படிக்க வேண்டும். தங்களது அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் நீங்கள் பின்னுக்கு தள்ளப்படுவீர்கள். வாரம் ஒரு புத்தகத்தையாவது படிக்க வேண்டும் என்றார்.