ADDED : மே 16, 2024 02:16 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் உணவு பொருள் பாதுகாப்பு துறையினர் கிழக்கு கடற்கரை சாலையில் உணவு பொருட்களை சோதனையிட்டு கொண்டிருந்தனர். அப்போது மினி சரக்கு வாகனத்தை நிறுத்தினர். வாகனம் நிற்காமல் சென்றது. உச்சிப்புளி போலீசாருக்கு தகவல் தெரிவித்து அந்த வாகனத்தை பிடித்தனர்.
அங்கு உணவு பொருள் பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் விஜயகுமார், மண்டபம் உணவு பாதுகாப்பு அலுவலர் லிங்கவேல், கீழக்கரை உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெயராஜ், ராமநாதபுரம் நகராட்சி உணவு பொருள் பாதுகாப்பு அலுவலர் தர்மர், மீன் வளத்துறை சார்பு ஆய்வாளர் அபுதாகிர், அய்யனார் வாகனத்தில் சோதனையிட்ட போது மஞ்சூர் கண்மாயில் பிடிக்கப்பட்ட 2,000 கிலோ மீன் விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.
இதில் தடை செய்யப்பட்ட 800 கிலோ ஆப்பிரிக்க தேளி மீன்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து கிழக்கு கடற்கரை சாலை அருகே குழிதோண்டி புதைத்தனர்.
மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயகுமார் கூறுகையில், ''அரியமானில் உள்ள கோழி தீவனம், மீன் எண்ணெய் தயாரிப்பு நிறுவனத்திற்கு கொண்டு சென்ற போது தேளி மீன்கள் பறிமுதல் செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு 'நோட்டீஸ்' வழங்கப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட அசைவம் சாப்பிடும் ஆப்பிரிக்க தேளி மீன் வளர்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.