/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கெடு
/
சாயல்குடியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கெடு
ADDED : மே 03, 2024 05:20 AM
சாயல்குடி: சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்பு கடைகளால் காலை மாலை நேரங்களில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதற்கு கெடு விதிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் ரோடு, அருப்புக்கோட்டை ரோடு, துாத்துக்குடி செல்லும் கிழக்கு கடற்கரை ரோடு உள்ளிட்டவைகளில் ரோட்டோர கடைகளின் தொடர் ஆக்கிரமிப்பால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வந்தனர்.
கனரக வாகனங்கள், அரசு பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் பெரும் இடையூறு ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சாயல்குடி பேரூராட்சி நிர்வாகம் சார்பில் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ள கெடு விதிக்கப்பட்டது.
சாயல்குடி பேரூராட்சி செயல் அலுவலர் மாலதி கூறுகையில், சாயல்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தங்களின் கடைகளுக்கு முன்புள்ள ஆக்கிரமிப்பை அவர்களே அகற்றிக் கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் மே 3 (இன்று) கடலாடி வருவாய்த்துறை சார்பில் உரிய பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.