ADDED : ஆக 29, 2024 05:04 AM
தொண்டி: தொண்டி பேரூராட்சி 5--வது வார்டு கவுன்சிலர் இறந்துவிட்டதால் அந்த வார்டில் இடைத்தேர்தல் நடத்த வலியுறுத்தப்பட்டது.
கடந்த 2021 உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பொறுப்பேற்றனர். தொண்டி பேரூராட்சி 5-வது வார்டு கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் தொண்டீஸ்வரன். இவர் கடந்த ஆண்டு மே மாதம் இறந்தார். அந்த வார்டுக்கான இடைத் தேர்தல் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த வார்டுக்கான தேர்தல் எப்போது நடக்கும் என மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
அந்த வார்டை சேர்ந்த மாலிக் கூறியதாவது: மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி விலகினால் அல்லது இறந்தால் இடைத்தேர்தல் ஆறு மாதத்திற்குள் நடத்த வேண்டும். ஆனால் தொண்டி பேரூராட்சி ஐந்தாவது வார்டு கவுன்சிலர் பணியிடம் ஓராண்டிற்கும் மேலாக காலியாக உள்ளது.
பொதுமக்களின் தேவைகளை அறிந்து பேரூராட்சியில் வலியுறுத்தி அடிப்படை வசதிகளை செய்வது வார்டு கவுன்சிலர்களின் முக்கிய கடமையாக உள்ளது. ஆகவே இந்த வார்டுக்கான தேர்தலை விரைவில் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

