/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சீமைகருவேலம் புதர்மண்டிய குண்டாறு வரத்துக்கால்வாய்
/
சீமைகருவேலம் புதர்மண்டிய குண்டாறு வரத்துக்கால்வாய்
சீமைகருவேலம் புதர்மண்டிய குண்டாறு வரத்துக்கால்வாய்
சீமைகருவேலம் புதர்மண்டிய குண்டாறு வரத்துக்கால்வாய்
ADDED : டிச 07, 2024 05:44 AM

கமுதி: கமுதி அருகே குண்டாறு வரத்துக்கால்வாய் துார்வாரப்படாததால் சீமைக்கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர் மண்டி மணல் மேடாகி இருப்பதால் தேங்கும் தண்ணீரை கூட பயன்படுத்த முடியாத அவல நிலை உள்ளது.
மதுரை வைகை ஆற்றில் இருந்து பிரிந்து வரும் கிளை ஆறுதான் குண்டாறு. இதன் வழியாக வரும் தண்ணீர் கமுதி அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு விவசாயம், குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஆற்றில் வரும் தண்ணீரை தேக்குவதற்காக கமுதி -முதுகுளத்துார் ரோடு கோட்டைமேடு அருகே பெரிய அணைக்கட்டு உள்ளது.
இதன் வழியாக வரும் தண்ணீர் முதுகுளத்துார், சாயல்குடி பகுதிக்கு பிரித்து விடப்படுகிறது. குண்டாறு வரத்துக்கால்வாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாததால் சீமைக்கருவேலம் மரங்கள் வளர்ந்து மணல் மேடாகியுள்ளது.
இதனால் தண்ணீர் தேங்கியும் பயனில்லாத நிலை உள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:
குண்டாறு வரத்துக்கால்வாயில் வரும் தண்ணீரை பயன்படுத்தி கமுதி அதனை சுற்றியுள்ள கண்மாய்கள் நிரப்பப்பட்டது. பல ஆண்டுகளாக கால்வாய் துார்வாரப்படாமல் இருப்பதால் சீமைக்கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர் மண்டியுள்ளது.
வரத்துக்கால்வாய் இருந்த இடம் தெரியாமல் மணல் மேடானது. இதனால் பருவமழைக் காலத்தில் மழை நீரும் முறையாக கால்வாயிலில் வருவதில்லை.
கிராம கண்மாய்கள் தண்ணீரின்றி வறண்டுள்ளது. எப்போதாவது வைகை அணையில் திறந்து விடப்பட்ட தண்ணீரும் தற்போது கால்வாய் துார்வாரப்படாததால் வருவதில்லை.
இதனால் கிராமங்களில் விவசாயம் அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாய சங்கத்தினர் பலமுறை கோரிக்கை விடுத்தும் துார்வார நடவடிக்கை எடுக்கவில்லை. பருவமழை காலத்தில் பெய்யும் மழை நீரும் வீணாகிறது.
எனவே முதுகுளத்துார், கமுதி, கடலாடி தாலுகா விவசாயிகளின் நலன் கருதி குண்டாறு வரத்துக்கால்வாயை துார்வாரி வைகை அணை தண்ணீரை இப்பகுதி மக்களின் விவசாயத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.