/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்
/
காவிரி குழாய் உடைப்பை சீரமைக்க நடவடிக்கை வேண்டும்
ADDED : ஜூன் 30, 2024 05:03 AM
முதுகுளத்துார், : முதுகுளத்துார் ஒன்றியத்தில் பல்வேறு இடங்களில் காவிரி குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு வருவதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் இருப்பதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஒன்றியத் தலைவர் சண்முகப்பிரியா கூறினார்.
முதுகுளத்துார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடந்தது. தலைவர் சண்முகப்பிரியா தலைமை வகித்தார். துணைத்தலைவர் கண்ணகி, பி.டி.ஓ.,க்கள் ஜானகி, அன்புக்கண்ணன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. விவாதங்கள் வருமாறு:
கலைச்செல்வி: கீழக்கன்னிச்சேரி கிராமத்தில் பயன்பாடின்றி உள்ள உயர்மின் கோபுர விளக்கை பராமரிக்க வேண்டும்.
அர்ஜூனன்: மட்டியரேந்தல், தாளியரேந்தல், வளநாடு உட்பட கிராமத்தில் காவிரி குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டும்.
பொக்கனாரேந்தல் கிராமத்தில் கையகத்திலிருந்து மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கூடிய விரைவில் உழவுப் பணி துவங்க இருப்பதால் வேளாண்துறை சார்பில் போதுமான விதை நெல் இருப்பு வைத்து மானிய விலையில் வழங்க வேண்டும்.
கடந்தாண்டு விதை நெல் பற்றாக்குறையால் கமிஷன் கடையில் கூடுதல் விலைக்கு வாங்கி விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
பொக்கனாரேந்தல் ஊருணியில் படித்துறை அமைக்க வேண்டும்.
காவிரி குடிநீர் திட்ட பணியாளர்: தற்போது ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் புதிதாக பைப்லைன் அமைக்கும் பணி நடப்பதால் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டு வருகிறது. கூடிய விரைவில் பணிகள் முடிந்தவுடன் சரி செய்யப்படும்.
ஒன்றிய தலைவர் சண்முகப்பிரியா: முதுகுளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஏராளமான இடங்களில் காவிரி குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருவது தொடர் கதையாக உள்ளது.
இதனால் பல்வேறு கிராமங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

