/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மிளகாய், பருத்திக்கு விலை கிடைக்க வழி செய்யப்படும்: கலெக்டர் தகவல்
/
மிளகாய், பருத்திக்கு விலை கிடைக்க வழி செய்யப்படும்: கலெக்டர் தகவல்
மிளகாய், பருத்திக்கு விலை கிடைக்க வழி செய்யப்படும்: கலெக்டர் தகவல்
மிளகாய், பருத்திக்கு விலை கிடைக்க வழி செய்யப்படும்: கலெக்டர் தகவல்
ADDED : மார் 06, 2025 03:58 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துாரில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பருத்தி, மிளகாய்க்கு அதிக விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கூறினார்.
முதுகுளத்துார் வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வேளாண், தோட்டக்கலை, வேளாண் விற்பனை, வேளாண் வணிகத்துறை சார்பில் பருத்தி, மிளகாய் விவசாயிகள், வியாபாரிகள், விஞ்ஞானிகள், அலுவலர்களுடன் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.
கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். அவர் கூறியதாவது:
மாவட்டத்தில் 1.30 லட்சம் எக்டேரில் நெல் சாகுபடி செய்யப்பட்டு பிரதான பயிராக உள்ளது. பருத்தி, மிளகாய் சாகுபடிக்கும் இம்மாவட்டத்தில் நல்ல வாய்ப்பு உள்ளது. தற்போது பருத்தி 10 ஆயிரம் எக்டேரிலும், மிளகாய் 18 ஆயிரம் எக்டேரில் விவசாயம் நடக்கிறது. இதனை அதிகப்படுத்த விவசாயிகள் முன்வர வேண்டும்.
வேளாண் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் பெற வேண்டும். பருத்திக்கும், மிளகாய்க்கும் அதிக விலை கிடைப்பதில் உள்ள பிரச்னைகள் தீர்க்கப்படும். தற்போது இந்திய பருத்தி கழகம் உள்ளிட்ட பல்வேறு வணிகர்களை அழைத்து கருத்து கேட்டறிந்து விலை கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில் பருத்தி, மிளகாய்க்கு விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்றார்.
வேளாண் இணை இயக்குனர் மோகன்ராஜ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பாஸ்கரமணியன், வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் வள்ளல் கண்ணன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஆறுமுகம் கலந்து கொண்டனர். உதவி இயக்குனர் கேசவராமன் நன்றி கூறினார்.