ADDED : ஜூன் 24, 2024 11:44 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் பிளஸ்-2 தேர்வின் போது தந்தை இறந்த நிலையில் தேர்வு எழுதி சாதித்த மாணவிக்கு கல்வி நிதியுதவி வழங்கப்பட்டது.
ராமநாதபுரம் காட்டூரணியை சேர்ந்தவர் ஆர்த்தி. கடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வின் போது பொருளியல் தேர்வு அன்று இவரது தந்தை முனியசாமி இறந்தார்.
அந்த சோகத்திலும் தேர்வு எழுதினார். இதில் 600க்கு 487 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
ஆர்த்தி வீட்டில் கழிப்பறை இல்லை என்றும், உயர் கல்வி பயில உதவி கேட்டு கோரிக்கை விடுத்திருந்தனர். தமிழ்நாடு தொலை தொடர்பு கணக்கு மற்றும் நிதிச்சேவை அதிகாரிகள் அறக்கட்டளை நிர்வாகிகள் மேற்படிப்புக்கு உதவி செய்ய முன் வந்தனர்.
அறக்கட்டளை உறுப்பினர்களான காரைக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற துணைப் பொது மேலாளர் (நிதி)ராமகிருஷ்ணன், விருப்ப ஓய்வு பெற்ற முதுநிலை கணக்கு அதிகாரி முத்துக்குமரன் ஆகியோர் ஆர்த்தியின் வீட்டுக்கு சென்று ரூ.10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் திருக்குறள் புத்தகத்தை வழங்கினர். ஆர்த்தியின் விருப்பப்படியே மதுரை அமெரிக்கன் கல்லுாரியில் பி.காம், சி.ஏ., பிரிவில் சேர்ந்துள்ளார். அவரது வீட்டில் கழிப்பறை கட்டும் பணிகள் நடக்கிறது.