/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஆசிரியர்கள் கைது: சங்கங்கள் கண்டனம்
/
கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஆசிரியர்கள் கைது: சங்கங்கள் கண்டனம்
கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஆசிரியர்கள் கைது: சங்கங்கள் கண்டனம்
கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் ஆசிரியர்கள் கைது: சங்கங்கள் கண்டனம்
ADDED : ஜூலை 31, 2024 04:40 AM

ராமநாதபுரம் : சென்னையில் தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய 1500 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டதற்கு ஆசிரியர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ஆசிரியர்கள் என்ன சமூக விரோதிகளா
ஆர்.சிவபாலன், மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ராமநாதபுரம்: தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ-ஜாக்) சார்பில் ஜூலை 29, 30, 31 தேதிகளில் சென்னை இயக்குனர் அலுவலகம் முற்றுகைப் போராட்டம் நடக்கிறது. பெண் ஆசிரியர்களின் பதவி உயர்வை பாதிக்கின்ற அராசாணை 243ஜ உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தேர்தல் வாக்குறுதியில் உறுதியளிக்கப்பட்ட ஆசிரியர், அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 31 கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்துகிறோம். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் ஆசிரியர்களை ஆங்காங்கே கைது செய்வதும், ஏதோ சமூக விரோதிகள் போல நடத்துவதும் கண்டனத்திற்குறியது.
பள்ளிகளில் சென்று பாடம் நடத்தும் ஆசிரியர்களை வீதியில் இறங்கி போராடச் செய்தது மட்டுமே இந்த அரசின் சாதனையாக உள்ளது. தமிழக அரசும் கல்வித்துறையும் உடனடியாக அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தவறும் பட்சத்தில் மீண்டும் வலுவான போராட்டத்தை முன்னெடுப்போம் என்றார்.
ஆசிரியர்களை மிரட்டி பணிய வைக்க முடியாது
மு. முனியசாமி, மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி, ராமநாதபுரம்: டிட்டோ-ஜாக் சார்பில் தமிழ்நாட்டின் கல்வி நலன், மாணவர் நலன், ஆசிரியர் நலன், சமூக நலன் சார்ந்த 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் சென்னையில் பள்ளிக்கல்வித் துறை தலைமை அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடக்கிறது.
ஆசிரியர்களின் உணர்வுகளை அரசு புரிந்து கொண்டு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். அதை விட்டு ஆசிரியர்களை கைது செய்து மிரட்டி பணிய வைத்துவிடலாம் என நினைப்பது கண்டனத்திற்குரியது. அரசாணை 243 மூலம் தொடக்கக்கல்வித் துறையில் 60 ஆண்டு காலமாக நடை முறையில் இருந்த பணியிட மாறுதல் முன்னுரிமை பறிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு ஆணையை ரத்து செய்ய வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடு, சரண் விடுப்பு ஒப்படைப்பு, ஊக்க ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த வாக்குறுதியையும் அரசு நிறைவேற்றவில்லை. இன்றும் (ஜூலை 31) போராட்டம் நடக்கிறது என்றார்.