/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நாளை ஆடி பிறப்பில் களை கட்டும் அம்மன் கோயில்கள்
/
நாளை ஆடி பிறப்பில் களை கட்டும் அம்மன் கோயில்கள்
ADDED : ஜூலை 16, 2024 05:36 AM
திருவாடானை, : அம்மனுக்கு உகந்த ஆடி மாதம் நாளை (ஜூலை 17) பிறப்பதால் கோயில்களில் வழிபாடு நடத்த பெண்கள் காத்திருக்கின்றனர்.
ஆடி மாதம் என்றாலே அம்மன் கோயில்களில் பூஜைகள் களைகட்ட துவங்கி விடும். வெள்ளி, செவ்வாயில் பெண் பக்தர்களின் கூட்டம் அலைமோதும்.
வேப்பிலை தோரணம், எலுமிச்சை மாலை, கோயில்களில் பூஜை பொருட்கள் குவியும்.
பொங்கல் வைத்து அம்மனுக்கு படைப்பதும், திருவிளக்கு பூஜை நடத்துவதும் பக்தர்களின் வழக்கம். பூஜைக்கு தேவையான பூக்கள் மற்றும் எலுமிச்சம் பழங்களை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்ய வியாபாரிகள் தயாராக உள்ளனர்.
நாளை (ஜூலை 17) ஆடி பிறப்பதால் திருவாடானை சிநேகவல்லி அம்மன், திருவெற்றியூர் பாகம்பிரியாள், தொண்டி சிவகாமி அம்மன் மற்றும் கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட முத்துமாரியம்மன் கோயில்களில் விழா நடத்துவற்கான ஏற்பாடுகளை பக்தர்கள் செய்து வருகிறார்கள்.
மேலும் ஜூலை 19 மற்றும் ஆக.1ல் சிவாலயங்களில் பிரதோஷ அபிஷேகம் நடக்க இருப்பது கூடுதல் சிறப்பாக உள்ளது. இது குறித்து சிவாச்சாரியார்கள் கூறியதாவது:
அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி கருதப்படுகிறது. இந்த மாதத்தில் விரதங்கள் இருப்பதால் பல விரதங்களில் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
இம்மாதத்தில் சூரியனில் இருந்து சூட்சும சக்திகள் அதிகளவில் வெளிப்படுகிறது.
ஆடிப்பட்டம் தேடி விதை என்ற சொல்லுக்கு ஏற்ப விவசாயத்திற்கு ஏற்ற காலம். பல்வேறு சிறப்புகள் இருப்பதால் ஆடி மாதம் சக்தி நிறைந்த மாதமாக ஜோதிட நுால்கள் கூறுகிறது என்றனர்.