/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓரியூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதில் தொய்வு பெயரளவில் செயல்படுதாக குற்றச்சாட்டு
/
ஓரியூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதில் தொய்வு பெயரளவில் செயல்படுதாக குற்றச்சாட்டு
ஓரியூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதில் தொய்வு பெயரளவில் செயல்படுதாக குற்றச்சாட்டு
ஓரியூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதில் தொய்வு பெயரளவில் செயல்படுதாக குற்றச்சாட்டு
ADDED : செப் 13, 2024 05:00 AM
திருவாடானை: திருவாடானை அருகே ஓரியூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்வதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது இருப்பில் உள்ள மரக்கன்றுகள் வெளி மார்கெட்டை காட்டிலும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
வறட்சியால் பாதிக்கப்படும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக அரசு சார்பில் தோட்டக்கலை பண்ணை அமைக்கபட்டு வருகிறது. திருவாடானை அருகே ஓரியூரில் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அரசு தோட்டக்கலை பண்ணை 36 ஏக்கரில் துவங்கப்பட்டது. 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர்.
ஆரம்பத்தில் நிழல் குடில் அமைத்து பல வகை மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு குறைந்த விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தொண்டி, எஸ்.பி.பட்டினம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சென்று பழக்கன்றுகளை வாங்கி பயனடைந்தனர். நாளைடைவில் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ளது. இதுகுறித்து செங்கமடை சுந்தரபாண்டி கூறியதாவது:
பூச்செடிகள் இல்லை. நிழல் வலை குடிலில் தக்காளி, பூச்செடிகள் விதை விதைத்து துறைக்கு அதிகளவு வருவாய் கிடைக்க செய்திருக்கலாம்.
ஆனால் வருவாய்க்கான முயற்சிகளை எடுக்காததால் பண்ணை பயன்படாத நிலைக்கு போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பல ஏக்கர் நிலங்கள் தரிசாக உள்ளது.
விவசாயிகளுக்கு தேவையான பழக்கன்றுகள், மரக்கன்றுகள், காய்கறி செடிகள் வழங்காமல் பெயரளவில் செயல்படுகிறது. தற்போது இருப்பில் உள்ள எலுமிச்சை, கொய்யா உள்ளிட்ட பல்வேறு கன்றுகள் ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஆனால் கிராமங்களில் நடைபெறும் வாரசந்தையில் இந்த வகை மரக்கன்றுகள் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது. மரங்களின் மகத்துவத்தை உணர்ந்தோர் அண்மைகாலமாக விழாக்கள், பண்டிகைகள் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு வரும் விருந்தினர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கி வருகின்றனர்.
தற்போது இந்த நடைமுறை பெருகி வருகிறது. ஆகவே மக்கள் பயன்பெறும் வகையில் உற்பத்தியை பெருக்க அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தோட்டக்கலைத் துறையினர் கூறுகையில், மா, பலா, கொய்யா, எலுமிச்சை, சீதா பழம், நெல்லிக்காய் இருப்பில் உள்ளது. இதில் மாங்கன்று ரூ.80க்கும், நெல்லி ரூ.50க்கும், சீதா பழம் ரூ.20க்கும் மற்ற வகைகள் ரூ.30க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றனர்.

