ADDED : செப் 05, 2024 05:04 AM

ராமநாதபுரம் : பேனாக்கள் குனியாமல் பெரும் புரட்சி நிகழாது. சாக்பீஸ்கள் கரையாமல் சமூக கேடுகள் விலகாது. அறிவு தீபம் ஏற்றாமல் அறியாமை இருள் அகலாது. இவை அத்தனைக்கும் சாட்சியாய் இந்த சமூகம் ஆசிரியரைத் தான் அடையாளப்படுத்தியுள்ளது.
பிளாட்டோவிற்கு ஒரு சாக்ரடீஸ். அலெக்சாண்டருக்கு ஒரு அரிஸ்டாட்டில். அப்துல் கலாமுக்கு ஒரு அய்யாதுரை சாலமன் என அறிவாளிகள் பேசப்படுவது அவர்களுடைய ஆசிரியர்களை வைத்துத்தான்.
சம்பளம் அல்ல அது சன்மானம்
''கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்ற யவை'' என்ற வள்ளுவரின் வாய்மொழிக் கேற்ப அழியாத கல்விச் செல்வத்தை மாணவர்களுக்கு வழங்க வேண்டியது ஆசிரியர்களுடைய அறப்பணியாகும்.
விலைமதிப்பற்ற செல்வத்தை கொடுத்து அதைப் பெற்றவர்கள் உயர்வதையே வரு பொருளாகக் கொண்டு வாழ்கிற கொடைத் தொழில் ஆசிரியப்பணி ஒன்றே ஆகும். அவர்கள் செய்வது தொழில் அன்று அது தொண்டு. அவர்கள் பெறுவது சம்பளம் அல்ல அது சன்மானம்.
நாளைய அறிஞர்களை, விஞ்ஞானிகளை, தலைவர்களை உருவாக்கக்கூடிய வல்லமை படைத்தவர்கள் ஆசிரியர்கள் மட்டுமே. அகல் விளக்கு போன்ற ஆசிரியச் சமூகம் ஆசிரியராக மட்டுமல்லாமல் மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் அத்தனையுமாக இருந்து மாணவர்களை வழி நடத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆசிரியர்களுக்கு உள்ளது.
வாழ்வின் முக்கிய வழிகாட்டி
ஒவ்வொரு துறைகளிலும் சாதித்த மனிதர்களிடம் உங்கள் வாழ்க்கையில் யார் மிக முக்கியமான வழிகாட்டி என்று கேட்டால் நிச்சயமாக அவர்களுக்கு போதித்த ஆசிரியர்களையே கூறுவார்கள். அதை விடுத்து உலகம் நம்மை பழிக்கிறது என்று நினைத்துக் கொண்டால் அந்த நினைவை நம்மிடம் இருந்து அகற்றவே முடியாது.
ஒவ்வொரு ஆசிரியரும் உளமாற பணியாற்றினால் மாணவர்கள் மட்டுமல்லாது இந்தச் சமூகமும் நம்மைக் கொண்டாடும். நவீன தொழில் நுட்பமும், சமூக வலைதளங்களும் உள்ள இந்தக்காலத்தில் சினிமா நட்சத்திரங்களையும், விளையாட்டு வீரர்களையும் தான் ஹீரோவாக நினைக்கிறார்கள் என்று நாம் கருதுவது தவறாகும். மாணவர்களின் முதல் முன்மாதிரி ஆசிரியர்களே.
ஆசிரியராய் மாறிய அப்துல் கலாம்
ஆசிரியர்கள் மாணவருக்கு அறிவும், அனுபவமும் நல்கி உதவும் போது மனிதநேயமுள்ள மனிதனாக உருவாகிறான் என்பதை உணர்ந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் தான் பயணப்படும் போதெல்லாம் குழந்தைகளோடு உரையாடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
குஜராத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் மாணவர்களோடு உரையாடும் போது, ஒரு மாணவன் நீங்கள் யாரை முன்மாதிரியாக தேர்ந்தெடுத்து பின்பற்றி வாழ்கிறீர்கள் என கேட்டதற்கு நான் மூவரை தேர்ந்தெடுத்து அவர்களைப் பின்பற்றி வாழ்கிறேன் என்றார்.
அதில் முதலாமவர் மகாத்மா காந்தியடிகள். அவர் பரந்த கண்ணோட்டம் கொண்டவர். இரண்டாமவர் சர்தார் வல்லபாய் பட்டேல். நம் தேசத்தை ஒன்றுபடுத்தி நமக்கு உறுதியையும் வலிமையையும் அளித்தவர். மூன்றாமவர் பேராசிரியர் விக்ரம் சாராபாய். இவர் என்னுடைய குரு. விஞ்ஞான தொழில் நுட்பத்தில் இந்தியாவை பெரிதும் வலிமை வாய்ந்த நாடாக ஆக்க வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டிருந்தார், என அந்த மாணவனிடம் கலாம் கூறினார்.
ஒரு வலிமையான தேசம் கட்டமைக்கப்படுவது நான்கு சுவர்களுக்குள்ளே (பள்ளியில்) என்பதை உணர்ந்திருந்ததால் தான் கலாம் தனது ஆரம்ப கல்வி ஆசிரியர் தொடங்கி பல்கலை பேராசிரியர்கள் வரை பேரன்பும், மரியாதையும் கொண்டிருந்தார். அதன் பயனாக அவரும் ஆசிரியராக போதனை செய்தார். அவரது வாழ்வின் கடைசி தருணத்திலும் மாணவர்கள் மத்தியில் தான் உரையாடிக்கொண்டிருந்தார்.
ஆசிரியரும் ஒரு போர் வீரனே
''கல்வி என்பது குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆளுமைத் திறனை வளர்க்கும் முயற்சி எனலாம். இம்முயற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களை இந்த சமூகமானது மாதா, பிதாவைத் தொடர்ந்து அடுத்த நிலையில் தெய்வத்திற்கும் மேலாக கருதும் நிலையை இன்றும் காண இயலும்.
ஒவ்வொரு மாணவர்கள் மீதும் அன்பும் அக்கறையும் கொண்டு அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரனே. அதில் வெற்றியோ தோல்வியோ என்ற கேள்விக்கு இடமின்றி அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சிக்கும் அனைவரும் தலை வணங்குவோம்,'' என இந்திய நாட்டின் முன்னாள் ஜனாதிபதியும், ஆசிரியருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கூறினார்.
அவரது பிறந்த தினமான செப்.5ல் ஆசிரியர் தினம் கொண்டாடுவதில் நாம் பெருமை கொள்வோம்.
பிஞ்சு விரல் வளைத்து, கொஞ்சும் குரல் இழைத்து, நெஞ்சமெல்லாம் நேசம் வைத்து 'அ'கரத்தை கற்றுத்தரும் அத்தனை ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களையும், கல்லையும் களி மண்ணையும் அறிவான சிற்பமாக மாற்றும் நவீன யுகத்துச் சிற்பிகளான அனைத்து ஆசிரியப் பெருந்தகைகளையும் இந்நன்நாளில் போற்றுவோம்! வாழ்த்துவோம்.
- செ.மணிவண்ணன் முதுகலை ஆசிரியர் அரசுமேல்நிலைப்பள்ளி தினைக்குளம் ராமநாதபுரம் மாவட்டம்.