/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தேர்தங்கல் சரணாலயத்தை விட்டு விலகாத பறவைகள்
/
தேர்தங்கல் சரணாலயத்தை விட்டு விலகாத பறவைகள்
ADDED : மே 30, 2024 09:33 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் மார்ச் மாதம் சீசன் முடிந்த பிறகும் கண்மாயில் தண்ணீர் உள்ளதால் சில வெளிநாட்டு பறவைகள் சரணாலயத்தை விட்டு விலகாமல் குஞ்சு பொரித்து அங்கேயே தங்கியுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம்தேர்த்தங்கல், மேல செல்வனுார், சித்திரங்குடி, காஞ்சிரங்குடி, சக்கரக்கோட்டை ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. இவற்றில் ஆண்டு தோறும் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கம் செய்வதற்காக வருகின்றன.
குறிப்பாக கூழைக்கடா, செங்கால் நாரை, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை ஆகியவை அக்டோபரில் வந்து மார்ச் வரை தங்கி அதன் பின் இடம் பெயரும்.
இவ்வாண்டு ராமநாதபுரம், பரமக்குடியில் மழை பெய்து கோடை காலத்திலும் நீர்நிலைகளில் தண்ணீர் உள்ளது. தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் தற்போதும் தண்ணீர் உள்ளது. இதனால் மே இறுதி வரை பறவைகள் கூட்டம் காணப்படுகிறது.
வனத்துறையினர் கூறியதாவது:
தேர்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் இரையை கருத்தில் கொண்டு மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பறவைகள் சென்றுவிட்டன. தண்ணீர் உள்ளதால் சிலபறவைகள் தொடர்ந்து தங்கியுள்ளன.
மீண்டும் அடுத்த ஆண்டு சீசனுக்குள் நீர்ப்பிடிப்பு பகுதிகளை துார்வாரவும், மரக்கன்றுகள் நட்டு, சரணாலயத்தை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.