/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பெண்ணிடம் சைகையில் பேசிய வனச்சரக அலுவலர்
/
பெண்ணிடம் சைகையில் பேசிய வனச்சரக அலுவலர்
ADDED : செப் 10, 2024 06:36 AM

கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வனச்சரக அலுவலகம் வழியாக சென்ற பெண்ணிடம் வனச்சரக அலுவலர் சைகை காட்டி பேசியதாக பெண்ணின் உறவினர்கள் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கீழக்கரை மன்னார் வளைகுடா வனச்சரக அலுவலகம் கடற்கரை அருகில் அமைந்துள்ளது. வனச்சரக அலுவலராக செந்தில்குமார் 48, பணியாற்றுகிறார். நேற்று காலை 6:00 மணிக்கு வாக்கிங் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்.
அப்பகுதியைச் சேர்ந்த 46 பெண் கீழக்கரை நகர் பகுதியில் உள்ள தொதல் அல்வா கடையில் பணி செய்கிறார். அவர் வேலைக்கு செல்ல அப்பகுதியை கடந்து சென்றார். செந்தில்குமார் அப்பெண்ணிடம் சைகையில் பேசியுள்ளார். இதையடுத்து செந்தில்குமாருடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதையறிந்த அப்பெண்ணின் உறவினர்கள் கீழக்கரை வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டு எதற்காக பெண்ணிடம் நீங்கள் பேசினீர்கள். என்ன காரணம். அதை உடனே கூற வேண்டும் எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கீழக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். புகாரில் அப்பெண், செந்தில்குமார் என்னிடம் பையில் என்ன வைத்திருக்கிறீர்கள். அலுவலகத்திற்கு கொண்டு வாருங்கள் எனக் கூறியதோடு, சைகை மூலம் அழைத்து பாலியல் சீண்டல் செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.
கீழக்கரை வனச்சரக அலுவலர் செந்தில்குமார் கூறுகையில், நான் இயல்பாக அப்பெண்ணிடம் இந்த நேரத்தில் கைப்பையுடன் எங்கே செல்கிறீர்கள் என்று தான் கேட்டேன். மற்றபடி எவ்வித பாலியல் சீண்டலும் செய்யவில்லை. என்னைப் பற்றி என்னுடன் இருக்கும் அலுவலர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரியும்.
என் விரல் கூட அப்பெண் மீது படவில்லை. என் மீது வீண்பழி சுமத்தி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளனர். நான் மெடிக்கல் லீவில் செல்ல உள்ளேன். பொதுவாக கீழக்கரை பகுதி முதல் வாலிநோக்கம் வரை கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் கடத்துவதற்கு நான் தடையாக உள்ளேன்.
எனது இந்த செயல்பாட்டை முடக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிலர் கூட்டு சதி செய்து என்னை பணியிட மாற்றம் செய்ய முயற்சிக்கின்றனர். என் மீது எந்த தவறும் இல்லை. எதையும் நான் சட்டப்படி சந்திக்க தயாராக உள்ளேன் என்றார்.