/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சுதந்திர போராட்ட மாவீரர்கள்
/
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சுதந்திர போராட்ட மாவீரர்கள்
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சுதந்திர போராட்ட மாவீரர்கள்
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய சுதந்திர போராட்ட மாவீரர்கள்
ADDED : ஆக 15, 2024 03:56 AM

ராமநாதபுரம் : இந்திய திருநாட்டு மக்கள் சுதந்திரக் காற்றை சுவாசிக்க எண்ணற்றவர்கள் தங்களின் இன்னுயிர்களை தியாகம் செய்துள்ளனர். தமிழகத்தில் மன்னர் புலித்தேவரில் துவங்கி வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமத்துரை, கோபால நாயக்கர், ராணி வேலு நாச்சியார், தீரன் சின்னமலை, முத்துராமலிங்க சேதுபதி போன்றவர்களை நாம் அறிவோம்.
இவர்களின் வரலாற்றுடன் சேது சீமையில் (ராமநாதபுரம்) மன்னர் முத்துராமலிங்க சேதுபதியை ஆங்கிலேயர்கள் சென்னையில் சிறைப்படுத்திய நேரத்தில் ராமநாதபுரம் பகுதியில் ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக மாவீரர்கள் மயிலப்பர் சேர்வைக்காரர், ஜெகநாத அய்யர் ஆகியோர் இருந்துள்ளனர்.
இவர்கள் குறித்து ராமநாதபுரம் வரலாற்று ஆர்வலர் மாரிச்சேர்வை கூறியதாவது:
மாவீரர் ஜெகநாத அய்யர்
ஆங்கில கும்பெனியார் 1795ல் பிப்., 8ம் நாளில் ராமநாதபுரம் கோட்டைக்குள் புகுந்து 2-வது முறையாக ரிபெல் முத்துராமலிங்கம் என்ற விஜயரகுநாத சேதுபதி மன்னரை கைது செய்து மீண்டும் திருச்சி கோட்டையில் சிறை வைத்தனர்.
அப்போது, ராமநாதபுரம் மக்களை அந்நிய ஏகாதிபத்தியத்தில் இருந்து காக்க முத்துக்கருப்பத்தேவர், மாவீரர் மயிலப்பர் சேர்வைகாரர்களுடன் இந்த ஜெகநாத அய்யர், அவரின் நண்பர்களான குமாரத்தேவர், கண்ணத்தேவர் ஆகிய மூன்று பேரும் கைகோர்த்தனர். 1799 ஜூலை 24 முதல் நடைபெற்ற மக்கள் கிளர்ச்சியில் துணிச்சலாகவும், தேசப்பற்றுடன் சித்திரங்குடி மயிலப்பர் சேர்வைக்கு தக்க துணையாக விளங்கினர்.
ராமநாதபுரம் கோட்டையில் அடைக்கப்பட்ட ஜெகநாத அய்யருக்கும், குமாரத்தேவனுக்கும் நீதி விசாரணை என்ற பெயரில் யானைகளை பிணைக்க பயன்படும் கடினமான இரும்பு சங்கிலிகளில் இருவரும் விலங்கிடப்பட்டனர்.
ஆயிரம் கசையடிகள் கொடுக்குமாறும், ஜெகநாத அய்யரின் சொத்துக்களை பறிமுதல் செய்து அவரை பினாங்கு தீவிற்கு நாடு கடத்த உத்தரவிட்டனர். இவர் குறித்து ஐ.ஏ.எஸ்., அதிகாரியான மு.ராஜேந்திரன் எழுதிய காலாபாணி என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அதில், அவர் பிராமணர் வலங்கையும் இல்லை, இடங்கையும் இல்லை. வயது 60 இருக்கும். மனைவி பெயர் பத்மாசினி ஜெகநாத அய்யர். சொத்துக்களை இழந்து கடைசியில் கண்காணாத தேசத்தில் அனாதையாக உயிர்விட்டார் என குறிப்பிட்டுள்ளார்.
ராஜசிங்க மங்கலத்தின்(ஆர்.எஸ்.மங்கலம்) மாவீரன் ஜெகநாத அய்யர் நினைவு நாளில் (ஏப்.26) ராஜசிங்க மங்கலத்தில் அரசு விழா எடுக்க வேண்டும் என்றார்.
*மாவீரர் மயிலப்பர் குறித்து கீழக்கரையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் உ. விஜயராமு கூறியிருப்பதாவது:
மாவீரர் மயிலப்பர்
நாட்டுக்காக தன்னையும் தன் குடும்பத்தையும் தியாகம் செய்த மாவீரர் மயிலப்பர். கடலாடி தாலுகா சித்திரங்குடி என்ற ஊரில் பிறந்தார்.மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் படைப் பிரிவில் இப்பகுதிக்கு தலைமையேற்று பணியாற்றியவர்.
கி.பி.1772ல் ஆற்காடு நவாப் ஆங்கில கிழக்கிந்திய கம்பெனி படையுடன் கூட்டுச் சேர்ந்து ராமநாதபுரம் கோட்டையை கைப்பற்றினார். அப்போது ராணியும் அவரது இளம் வயது இளவரசரான முத்துராமலிங்க சேதுபதியும் நவாப் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டனர்.
மயிலப்பர் தலைமையில் மக்கள் கலவரத்தை ஏற்படுத்தினார். நவாப்பின் ஆட்கள் தங்களுடைய பகுதிக்கு உள்ளே நுழைய முடியாதபடி தடையாக இருந்தனர். இதனால் சேதுபதியை விடுதலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் கம்பெனிக்கு ஏற்பட்டது. முத்துராமலிங்க சேதுபதி மீண்டும் ராமநாதபுரம் மன்னரானார். இதுவே அந்நியருக்கு எதிரான முதல் விடுதலைப் போராட்டத்தின் வெற்றியாகும்.
அதன் பிறகு மீண்டும் 1795 ல் சேதுபதி மன்னரை கம்பெனிக்காரர்கள் கைது செய்து திருச்சி சிறையில் அடைத்த செய்தி அறிந்த மயிலப்பர் மிகவும் வேதனை அடைந்தார். அங்கு சென்று மன்னரை தப்பிக்க பல ரகசிய முயற்சிகள் செய்தும் பலன் இல்லை.
முதுகுளத்துார் பகுதியில் மக்களைத் திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராக போராட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அதனால் அப்பகுதி மக்கள் அதுவரை சேதுபதிக்கு கொடுத்து வந்த வரியை 1796க்குப் பிறகு ஆங்கிலயருக்கு கொடுக்க மறுத்தனர்.
பல்வேறு கட்ட போராட்டங்களுக்கு பிறகு மயிலப்பர் மருதுபாண்டியருடன் இணைந்து பாஞ்சை, காடல்குடி, நாகலாபுரம், குளத்துார் ஆகிய எதிர்ப்பு கிளர்ச்சிக் காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டார்.
எனவே கலெக்டர் லுாசிங்டன் மயிலப்பரை ஒப்படைக்கும் படி மருது சகோதரர்களுக்கு கட்டளையிட்டார்.
ஆனால் மருதுபாண்டியர் ஆங்கிலேயரின் உத்தரவை ஏற்கவில்லை. தொடர்ந்து போராடிய மயிலப்பர் துரோகிகளால் காட்டிக் கொடுக்கப்பட்டார். 1802 ஆக. 6ல் அபிராமத்தில் துாக்கிலிடப்பட்டார்.
சேதுபதியின் சேர்வைக்காரரான மயிலப்பர் அந்நியருக்கு எதிராக நடத்திய கிளர்ச்சியானது பாளையக்காரர்கள் நடத்திய கிளர்ச்சிக்கு முன்னோடியாக இருந்தது.
நாட்டுக்காக போராடி இன்னுயிர் ஈந்த சுதந்திர போராட்ட தியாகிகளை நாட்டின் 78-வது சுதந்திர தினத்தில் அனைவரும் போற்றுவோம்.