/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிக்கலில் அரசு நேரடி பருத்தி கொள்முதல் நிலையம் தேவை இடைத்தரகர்களால் பாதிப்பு
/
சிக்கலில் அரசு நேரடி பருத்தி கொள்முதல் நிலையம் தேவை இடைத்தரகர்களால் பாதிப்பு
சிக்கலில் அரசு நேரடி பருத்தி கொள்முதல் நிலையம் தேவை இடைத்தரகர்களால் பாதிப்பு
சிக்கலில் அரசு நேரடி பருத்தி கொள்முதல் நிலையம் தேவை இடைத்தரகர்களால் பாதிப்பு
ADDED : மே 25, 2024 05:36 AM
சிக்கல் : சிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகளவு பருத்தி சாகுபடி செய்யப்படுவதால் இடைத்தரகர்களிடம் விவசாயிகள் பாதிக்கப்படுவதை தடுக்க அரசு நேரடி பருத்தி கொள்முதல் நிலையம் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கோடை கால விவசாயமாக பருத்தி திகழ்கிறது. இதற்கு குறைவான மழைப்பொழிவு மற்றும் தேவைக்கு ஏற்ப நீர் வசதி இருந்தால் போதும். ஆகவே பெரும்பாலான விவசாயிகள் கண்மாய் பாசனம் மற்றும் மானாவாரி நிலங்களில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர்.
நெல் அறுவடைக்குப் பிறகு கோடை உழவாக பருத்தியும் மற்றும் விளை நிலங்களில் நேரடியாக பருத்தி சாகுபடியும் விவசாயிகள் செய்கின்றனர். பருத்தியை இடைத்தரகர்கள் மூலம் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் எதிர்பார்த்த லாபம் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் தொடர் பாதிப்பை பருத்தி விவசாயிகள் சந்திக்கின்றனர்.கோடை மழையும் பருத்தி விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிக்கலை சேர்ந்த விவசாய தொழிலாளர்கள் சங்க மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.போஸ் கூறியதாவது: கடந்தாண்டு பருத்தி கிலோ ரூ.110க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது ரூ.50க்கு இடைத்தரகர்களின் முயற்சியால் தனியார் வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். ஏக்கருக்கு ரூ.15,000 வீதம் செலவு செய்யும் பருத்தி விவசாயிகள் அவற்றின் பலனை அடைய முடியவில்லை.
பருத்திக்கு பரமக்குடியில் மட்டுமே அரசின் நேரடி கொள்முதல் நிலையம் உள்ளது. சிக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் 35 கிராமங்களில் பருத்தி சாகுபடி செய்துள்ளனர். எனவே அரசு உரிய நடவடிக்கை எடுத்து சிக்கலில் அரசு நேரடி பருத்தி கொள்முதல் நிலையம் அமைத்தால் விவசாயிகளுக்கு எதிர்பார்த்த தொகை கிடைக்கும்.
விலை குறைவு போன்ற பாதிப்பு இருக்காது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

