/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மைதானம் கூட இல்லை ராமநாதபுரம் அரசு புதிய சட்டக் கல்லுாரியில்.. *அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை
/
மைதானம் கூட இல்லை ராமநாதபுரம் அரசு புதிய சட்டக் கல்லுாரியில்.. *அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை
மைதானம் கூட இல்லை ராமநாதபுரம் அரசு புதிய சட்டக் கல்லுாரியில்.. *அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை
மைதானம் கூட இல்லை ராமநாதபுரம் அரசு புதிய சட்டக் கல்லுாரியில்.. *அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரிக்கை
ADDED : செப் 01, 2024 05:01 AM

திருப்புல்லாணி : ராமநாதபுரம் மாவட்ட அரசு சட்டக் கல்லுாரி புதிய கட்டடத்தில் மைதானம் வசதி கூட இல்லாத நிலையில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுமாறு சட்டக் கல்லுாரி மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் அரசு சட்டக் கல்லுாரி கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பிருந்து மண்டபம் ஒன்றியம் பெருங்குளம் அரசுப்பள்ளியில் செயல்பட்டு வருகிறது. ஆக.12 முதல் அனைத்து கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய புதிய அரசு சட்டக் கல்லுாரி கட்டடம் குதக்கோட்டை ஊராட்சியில் தமிழக முதல்வரால் காணொலி காட்சியில் திறந்து வைக்கப்பட்டது.
இங்கு ரூ.76 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்த அரசு சட்டக் கல்லுாரியில் கட்டுமான வசதிகள் எல்லாம் கிடைக்கப் பெற்றுள்ள நிலையில் சட்டக் கல்லுாரி மாணவர்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றினால் பயனுள்ளதாக இருக்கும்.
தற்போது சட்டக் கல்லுாரியில் 700 மாணவர்கள் படிக்கின்றனர்.
நுாலகம், மீட்டிங் ஹால், 30 வகுப்பறைகள், மாணவியர் விடுதி, முதல்வர் மற்றும் அலுவலர்கள் அறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளது.
அதே நேரம் மாணவர்களுக்கான விளையாட்டு மைதானத்திற்கு இடமிருந்தும் மைதானம் அமைக்கப்படாமல் அப்பகுதி முழுவதும் புதர் மண்டியும், மணல் நிறைந்தும் காணப்படுகிறது. இதனால் கல்வி நேரம் போக இதர நேரத்தில் மாணவர்கள் விளையாடுவதற்கு வழியின்றி உள்ளது.
வாலிபால், கோ-கோ, டென்னிஸ், இறகுப்பந்து, கூடைப்பந்து விளையாடுவதற்கான மைதான வசதி அமைப்பதற்கு போதுமான இடவசதி இருந்தும் எதுவும் இல்லாத நிலையில் மாணவர்கள் தவிக்கின்றனர். ரூ.76 கோடி செலவிட்டும் இதைக்கூட செய்யாமல் உள்ளனர்.
மேலும் மாணவர்களுக்கு குடிநீர் வசதியும் இல்லை. காவிரி குடிநீர் இணைப்பு இல்லாததால் மிகுந்த சிரமத்தை சந்திக்கின்றனர். குதக்கோட்டை ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் கிணற்றிலிருந்து கல்லுாரிக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. இருப்பினும் காவிரி குடிநீர் அத்தியாவசிய தேவையாக உள்ளது.
கல்லுாரிக்கு முன்பு பயணியர் நிழற்குடை இல்லாததால் மாணவர்கள் வெயிலிலும் மழையிலும் நிற்க வேண்டியுள்ளது. ரெகுநாதபுரம் சுற்று வட்டார கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் அரசு சட்டக் கல்லுாரி வழியாக சென்றால் பயனுள்ளதாக இருக்கும். இங்கிருந்து 2 கி.மீ.,ல் உள்ள கிழக்கு கடற்கரைச் சாலை மெயின் ரோட்டுக்கு நடந்து சென்று பஸ் ஏறும் நிலை உள்ளது.
எனவே சட்டக் கல்லுாரி மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.
---