/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி நகைகள் மோசடியில் ஸ்தானிகரிடம் மீண்டும் விசாரணை
/
திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி நகைகள் மோசடியில் ஸ்தானிகரிடம் மீண்டும் விசாரணை
திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி நகைகள் மோசடியில் ஸ்தானிகரிடம் மீண்டும் விசாரணை
திருப்புல்லாணி கோயிலில் ரூ.1 கோடி நகைகள் மோசடியில் ஸ்தானிகரிடம் மீண்டும் விசாரணை
ADDED : ஜூன் 19, 2024 02:04 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி ஆதி ஜெகநாதபெருமாள் கோயிலில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சுவாமி நகைகள் மோசடி செய்யப்பட்ட வழக்கில் மீண்டும் ஸ்தானிகரிடம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஆதி ஜெகநாதர், பத்மாசனித் தயாருக்கு அணிவிக்கும் நகைகளில் 952 கிராம் 30 தங்க நகைகள், 1199 கிராம் 16 வெள்ளி நகைகள் என ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் மாயமாயின.
திவான் பழனிவேல் பாண்டியன் புகாரில் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நகைகளின் பொறுப்பாளரான கோயில் ஸ்தானிகர் சீனிவாசன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
ஸ்தானிகர் மற்றும் அவருடன் பணியாற்றிய ராமு, சாமித்துரை, முன்னாள் திவான் மகேந்திரன் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர்.
சீனிவாசன் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமின் மனு தாக்கல் செய்தார். அதில் நீதிபதி இடைக்கால முன் ஜாமின் வழங்கினார்.
அதன்படி ஜூன் 27 வரை கைது செய்யக்கூடாது. விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜூன் 27ல் வழக்கை விசாரித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நகை மோசடி வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
நேற்று ஸ்தானிகர் சீனிவாசன் விசாரணைக்காக மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகினார். அவரிடம் பல மணி நேரம் துருவி, துருவி நகைகள் மாயமான விதம் குறித்து கேள்விகள் கேட்டனர்.
இதனடிப்படையில் போலீசார் மேலும் சிலரை வழக்கில் சேர்த்து விசாரணை அறிக்கையை ஜூன் 27ல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளனர்.