/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தசாவதாரம், கிருஷ்ண பாகவத காட்சி சிற்பங்களுடன் திருப்புல்லாணித் தேர்
/
தசாவதாரம், கிருஷ்ண பாகவத காட்சி சிற்பங்களுடன் திருப்புல்லாணித் தேர்
தசாவதாரம், கிருஷ்ண பாகவத காட்சி சிற்பங்களுடன் திருப்புல்லாணித் தேர்
தசாவதாரம், கிருஷ்ண பாகவத காட்சி சிற்பங்களுடன் திருப்புல்லாணித் தேர்
ADDED : ஏப் 19, 2024 05:03 AM

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதிஜெகநாத பெருமாள் கோயில் தேரில் தசாவதாரம், கிருஷ்ண பாகவத காட்சிகள் ஆகிய கலைநயமிக்க சிற்பங்கள் பக்தர்களை வெகுவாக கவர்ந்துஉள்ளது.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் வைணவ திவ்ய தேசங்களில் 44வதாக திகழ்கிறது. இங்கு பங்குனி பிரமோற்ஸவமும், சித்திரை மாத சைத்ரோத்ஸவம் ஆகிய விழாக்களில் தேரோட்டம் நடக்கிறது.
500 ஆண்டுகளுக்கு முந்தைய பழமையான தேர், ஐந்து நிலை அடுக்குகளாக 30 அடி உயரம் கொண்டதாகும். ஒவ்வொரு அடுக்கிலும் உள்ள பகுதி நிலைகளில் நான்கு திசைகளிலும் சுற்றி தசாவதார காட்சிகள், கிருஷ்ண லீலா மற்றும் பாகவத காட்சிகள் கலைநயமிக்க சிற்பங்களாக உள்ளது.
தேவகணங்கள், ராட்சதகணங்கள், ரதி மன்மதன், விநாயகர், முருகன், தேரடி கருப்பண்ணசாமி, நாரதர், சப்தரிஷிகள், பிரிங்கி முனிவர், பதஞ்சலி முனிவர் உள்ளிட்ட காணக் கிடைக்காத முனிவர்களின் எழில் மிகு சிற்பக் காட்சிகள் எங்கும் பரவி கிடக்கின்றன.
திருப்புல்லாணி கோயில் ஸ்தானிக பட்டாச்சாரியார்கள் கூறியதாவது:
பெருமாள் கோயில் தேர் 2001ல் மர சக்கரங்கள் அகற்றப்பட்டு உயர் ரக இரும்பினால் ஆன தேர்ச்சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 30 அடி உயரம் கொண்டதில் 21 அடி கூரை சேர்த்து 51 அடி உயரத்தில் உற்ஸவமூர்த்திகள் உடன் திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் உலா வருகின்றது.
தேரோட்டத்திற்கு வடம் பிடித்து இழுக்கும் பக்தர்கள் தேரை சுற்றி உள்ள சிற்பங்களை வணங்குகின்றனர் என்றனர்.

