ADDED : ஜூலை 20, 2026 04:31 PM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கண்டறிய ரூ.2.7 லட்சம் மதிப்பிலான நவீன கருவிகளை போலீசார் கொள்முதல் செய்துள்ளனர்.
விபத்துகளை தடுக்க போக்குவரத்து போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தி வருகின்றனர். குறிப்பாக மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களால் அதிகளவில் விபத்துகள் நடக்கின்றன. இதனை தடுக்க முக்கிய சாலைகள் மற்றும் சந்திப்புகளில் போக்குவரத்து போலீசார் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது மது போதையில் வருபவர்களை கண்டறிய நவீன சுவாச பகுப்பாய்வு கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:
வாகன சோதனையின் போது மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களை துல்லியமாகவும், விரைவாகவும் கண்டறிய நவீன கருவிகள் வாங்கப்பட்டுள்ளது. சாலைப் பாதுகாப்பு நிதியில் இருந்து ரூ.2.7 லட்சத்தில் 6 சுவாச பகுப்பாய்வு கருவிகள் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
மது அருந்தி வாகனம் ஓட்டுபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். டிரைவிங் லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்றனர்.
–––
