/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரெகுநாதபுரத்தில் வாரச்சந்தை ஏற்பாடுகள் தீவிரம்
/
ரெகுநாதபுரத்தில் வாரச்சந்தை ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : ஜூலை 23, 2024 05:04 AM

ரெகுநாதபுரம்: ரெகுநாதபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் முதல் முறையாக ஆக.3ல் ஆடி 18 பெருக்கு நாளில் புதிய சந்தை துவங்க உள்ளது. இதன் மூலமாக சுற்றுவட்டார 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைவார்கள்.
ராமநாதபுரத்தில் இருந்து 18 கி.மீ.,ல் ரெகுநாதபுரம் உள்ளது. திருப்புல்லாணி ஒன்றியத்தில் இருந்து 11 கி.மீ.,ல் அமைந்துள்ளது. முத்துப்பேட்டை, பெரியபட்டினம், வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், காரான், கும்பரம், வெள்ளரி ஓடை, வாலாந்தரவை, நையினாமரைக்கான், பத்திராதரவை உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களின் மையப் பகுதியாக ரெகுநாதபுரம் விளங்குகிறது.
ரகுநாதபுரம் ஊராட்சி தலைவர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:
இங்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் சந்தை அமைக்ககோரி அப்போதைய கலெக்டர் விஷ்ணு சந்திரனிடம் உரிய அனுமதி பெறப்பட்டுள்ளது. ரெகுநாதபுரத்தில் ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் காலை முதல் இரவு வரை சந்தை அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடக்கிறது.
ஆடி 18ல் சந்தை அமைக்கும் நாளில் ஏராளமான வியாபாரிகள், கிராம மக்கள் தங்களுடைய உற்பத்தி மற்றும் விளைபொருட்களை இங்கே கொண்டு வந்து விற்பனை செய்து பயன்பெறலாம். இதன் அருகில் ஆடு, மாடு உள்ளிட்டவைகளுக்கான சந்தையும் உள்ளது.
இரண்டரை ஏக்கரில் சந்தையை நம்பி பல ஆயிரம்பொதுமக்கள் கூடும் இடமாக உள்ளதால் அவர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி உள்ளிட்டவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டத்தில்வைக்கப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் புதிதாக சந்தை ரெகுநாதபுரத்தில் துவங்கப்பட உள்ளது. வியாபாரிகள், பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம், என்றார்.
திருப்புல்லாணி யூனியன் பி.டி.ஓ.,க்கள் ராஜேஸ்வரி, கோட்டை இளங்கோவன் உடனிருந்தனர்.