/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி அருகே ரயிலை கவிழ்க்க சதி தண்டவாளத்தில் 420 கிளிப்களை கழற்றியது யார்?
/
பரமக்குடி அருகே ரயிலை கவிழ்க்க சதி தண்டவாளத்தில் 420 கிளிப்களை கழற்றியது யார்?
பரமக்குடி அருகே ரயிலை கவிழ்க்க சதி தண்டவாளத்தில் 420 கிளிப்களை கழற்றியது யார்?
பரமக்குடி அருகே ரயிலை கவிழ்க்க சதி தண்டவாளத்தில் 420 கிளிப்களை கழற்றியது யார்?
ADDED : செப் 18, 2024 01:18 AM

பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லுார் பகுதியில் தண்டவாளத்தில் இருந்து 420 கிளிப்புகள் கழற்றப்பட்டிருந்தன. ரயில்வே கீ மேனிடம் விசாரணை நடத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை, ராமேஸ்வரம் ரயில்வே பாதை பலப்படுத்தப்பட்டு, 110 கி.மீ., வேகத்தில் ரயில்கள் சென்று வருகின்றன. நேற்று முன்தினம் காலை, 8:10 மணிக்கு மதுரையிலிருந்து ராமநாதபுரம் நோக்கி பயணியர் ரயில் வந்துள்ளது.
ரயில் நிறுத்தம்
சூடியூர் - பரமக்குடி இடையே தெளிச்சாத்த நல்லுார் பகுதியில் தண்டவாளத்தையும், ஸ்லீப்பர் கான்கிரீட்களையும் இணைக்கும் கிளிப்புகள் கழற்றி விடப்பட்டிருந்தன.
அங்கு பணியில் இருந்த கீமேன் செந்தில்குமார், 43, துரிதமாக செயல்பட்டு, ராமநாதபுரம் ரயிலை எச்சரிக்கை செய்து நிறுத்தினார். சிறிது நேர தாமதத்திற்கு, பின், 10 கி.மீ., வேகத்தில் மெதுவாக ரயில் இயக்கப்பட்டு பரமக்குடியை அடைந்தது.
அதிகாரிகள் ஆய்வில், 120 மீ., நீளத்திற்கு, 210 ஸ்லீப்பர் கான்கிரீட்களில் இருபுறமும் இருந்த, 420 கிளிப்புகள் கழற்றி விடப்பட்டிருந்தது தெரிந்தது. ஊழியர்கள் உடனடியாக கிளிப்புகளை சரி செய்தனர். தொடர்ந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன.
கீமேன் செந்தில்குமாரை ரயில்வே போலீசார் விசாரணைக்கு நேற்று முன்தினம் மாலை அழைத்துச் சென்றனர். இரவு, 11:00 மணி வரை அவரை விடுவிக்காததால் மானாமதுரை ரயில்வே ஸ்டேஷனில் உள்ள ரயில்வே போலீஸ் அலுவலகம் முன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டம்
மேல் விசாரணைக்காக செந்தில்குமாரை மதுரைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். நேற்று காலையும் ரயில்வே ஸ்டேஷன் முன் ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், விசாரணைக்கு அழைக்கும் போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் செந்தில்குமார் விடுவிக்கப்பட்டார். கிளிப்களை கழற்றியவர்கள் குறித்து டி.எஸ்.பி., தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரிக்கின்றனர்.
அக்., 2ல் பாம்பன் ரயில் பாலம் துவக்க நிகழ்ச்சிக்கு பிரதமர் மோடி வர உள்ள நிலையில், ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.