ADDED : ஜன 07, 2026 05:36 AM

ராமநாதபுரம்: அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக அறிவிக்க வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட 1380 பேரை போலீசார் கைது செய்தனர். சங்க மாநில செயலாளர் மல்லிகா மயங்கி விழுந்தார்.
ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கத்தினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாநில செயலாளர் மல்லிகா தலைமையில் 1400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் உமா முன்னிலை வகித்தார். அனைத்து துறை ஓய்வூதிய சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் சேகர் போராட்டத்தை துவக்கி வைத்தார்.
மல்லிகா கூறியதாவது:
முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது அங்கன்வாடி ஊழியர்களை அரசு ஊழியராக ஆக்குவோம் என வாக்குறுதி அளித்தார். வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துகிறோம். அங்கன்வாடி ஊழியர்களுக்கு வரையறை செய்யப்பட்ட பணி இல்லை. ஆசிரியர், சுகாதாரம், பேரிடர் மேலாண்மை, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் என மத்திய, மாநில அரசின் பல்வேறு பணியில் ஈடுபடுகிறோம்.
இதில் பெரும்பாலும் கைம்பெண்கள் பணிபுரிகின்றனர். அவர்களுக்கு ஊதியம் போதிய அளவில் வழங்காததால் குடும்பத்தை காப்பாற்ற முடியவில்லை. ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.9000 வழங்க வேண்டும். தமிழக முதல்வர் அழைத்து பேசவில்லை என்றால் ஜன.,27 முதல் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றார். ராமநாதபுரம்-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் ஒரு மணி நேரத்திற்கு மேல் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போராட்டத்தின் போது மாநில செயலாளர் மல்லிகா மயங்கி விழுந்தார். உடனே அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 1380 பேரை போலீசார் கைது செய்தனர்.
