/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
17 மீனவர்கள் விடுதலை கோரி போராட்டம் நடத்த முடிவு
/
17 மீனவர்கள் விடுதலை கோரி போராட்டம் நடத்த முடிவு
ADDED : செப் 30, 2024 11:41 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தை சேர்ந்த 17 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களை உடனடியாக விடுதலை செய்யாவிடில் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் மீனவர்கள் செப்.,28 ல் இந்திய எல்லையில் கச்சத்தீவு அருகேமீன்பிடித்த போது விரட்டி வந்த இலங்கை கடற்படையினர் இரு படகுகள், அதிலிருந்த 17 மீனவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களை விடுதலை செய்யக்கோரி நேற்று ராமேஸ்வரம் வி.கே. ஞானசீலன் விசைப்படகு மீனவர் நலச்சங்கம், பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்.
விசைப்படகு மீனவர் நலச்சங்கத் தலைவர் பி.காரல் மார்க்ஸ் கூறியதாவது:
மீனவர்கள் கடலுக்குச் சென்றால் தான் குடும்பத்தை காப்பாற்ற முடியும். இலங்கை அரசு ராமேஸ்வரம் மீனவர்களின் வயிற்றில் அடிக்கிறது. உடனடியாக படகுகள், 17 மீனவர்களை மீட்டுத்தருகிறோம் என கலெக்டர் கூறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகள் மீனவர்கள், படகுகளை மீட்டுத்தரவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக மீனவர் குடும்பங்கள் இணைந்து சாகும் வரை தொடர் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.