/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 35 பேர் விடுதலை
/
ராமேஸ்வரம் மீனவர்கள் 35 பேர் விடுதலை
ADDED : செப் 19, 2024 02:10 AM
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் இருந்த ராமேஸ்வரம் நாட்டுப்படகு மீனவர்கள் 35 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்தது.
ஆக.8ல் ராமேஸ்வரம் அருகே பாம்பனில் இருந்து 4 நாட்டுப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 35 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து புத்தளம் சிறையில் அடைத்தனர். மீனவர்கள் மீதான விசாரணை நேற்று நீதிமன்றத்தில் நடந்தது.
இதில் மீனவர்கள் 35 பேருக்கும் 42 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இத்தண்டனையை மீனவர்கள் சிறையில் அனுபவித்ததால் அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டது. மீனவர்கள் இன்று (செப்.19) கொழும்பு அருகே மெரிகானா முகாமிற்கு கொண்டு செல்லப்பட உள்ளனர்.
அங்கிருந்து ஓரிரு நாட்களுக்குப் பின் விமானத்தில் சென்னை வர உள்ளனர் என மீனவர் சங்க ஒருங்கிணைப்பாளர் சின்னதம்பி தெரிவித்தார்.
செப்.27 ல் அனைவரும் விடுதலை
ஜூன் 15 முதல் செப்.15 வரை ராமேஸ்வரம், துாத்துக்குடி மற்றும் புதுக்கோட்டை, நாகை, தஞ்சை மாவட்டங்களில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களில் 300க்கும் மேற்பட்டோர் இலங்கை யாழ்ப்பாணம், வவுனியா, புத்தளம் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் நல்லெண்ண அடிப்படையில் அவர்களை விடுவிக்க மத்திய அரசு வலியுறுத்தியது. செப்.21ல் இலங்கையில் பார்லிமென்ட் தேர்தல் முடிந்ததும் செப்.27ல் தமிழக மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. பிரதி பலனாக தமிழக சிறையில் உள்ள இலங்கை மீனவர்களும் விடுவிக்கப்பட உள்ளனர்.