/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காக்கி உதவும் கரங்கள் வழங்கிய ரூ.4.89 கோடி
/
காக்கி உதவும் கரங்கள் வழங்கிய ரூ.4.89 கோடி
ADDED : பிப் 15, 2024 04:59 AM

ராமநாதபுரம்: காக்கி உதவும் கரங்கள் அமைப்பு சார்பில் இறந்த 31 போலீசாரின் குடும்பங்களுக்கு ரூ.4.89 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011ல் போலீஸ் பணியில் சேர்ந்த 5500 பேர் இன்ஸ்டாகிராம் குரூப்பில் ஒருங்கிணைந்துள்ளனர். 2011ல் போலீஸ் பணியில் சேர்ந்தவர்களில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு ஒவ்வொரு உறுப்பினரும் தலா ரூ.500 பங்களிப்பு செலுத்துகின்றனர்.
இது போல் சேகரித்த தொகையில் இதுவரை 31 போலீசாரின் குடும்பத்திற்கு ரூ.4.89 கோடி நிதியுதவி வழங்கியுள்ளனர். இன்னும் 3 பேர் குடும்பத்திற்கு உதவ உள்ளனர்.
ராமநாதபுரத்தை சேர்ந்த குணராஜா என்ற போலீஸ்காரர் மூன்று மாதங்களுக்கு முன்பு சத்திரக்குடி பகுதியில் விபத்தில் பலியானார்.
அவரது குடும்பத்திற்கு காக்கி உதவும் கரங்கள் மூலம் ரூ.26.35 லட்சம் உறுப்பினர்களிடம் வசூலிக்கப்பட்டது.
இந்த தொகையில் குணராஜாவின் பெண் குழந்தைக்கு ரூ.23 லட்சம், அவரது மனைவி மவுனிகாவிற்கு ரூ.1.67 லட்சம், அவரது தாய் மணிமேகலைக்கு ரூ.1.67 லட்சத்தை ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷ் மூலம் வழங்கினர்.
பெண் குழந்தை பெயரில் ரூ.23 லட்சம் எல்.ஐ.சி., நிறுவனத்தில் 18 ஆண்டுகளுக்கு டிபாசிட் செய்யப்பட்டது. இத்தொகை 3 மடங்காக அந்த குழந்தைக்கு கிடைக்கும்.
காக்கி உதவும் கரங்கள் ராமநாதபுரம் மாவட்ட அட்மின் நிர்மல்ராஜ் கூறியதாவது:
எங்களது 2011 பேட்சில் உள்ளவர்கள் 5500 பேர் இன்ஸ்டாகிராமில் ஒருங்கிணைந்துள்ளோம்.
மாவட்டத்திற்கு ஒரு அட்மின் உள்ளனர். இந்த 5500 உறுப்பினர்களில் யார் விபத்திலோ, இயற்கை மரணமடைந்தாலோ அந்த மாதம் சம்பளத்தில் ரூ.500 பங்களிப்பாக வழங்குவார்கள்.
அந்தத் தொகையை மொத்தமாக சேர்த்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு வழங்குகிறோம். மாதம் ஒரு குடும்பத்திற்கு மட்டுமே இந்த உதவி வழங்கப்படும்.
இதன் காரணமாக 3 பேர் குடும்பத்தினர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர். அடுத்தடுத்து வரும் மாதங்களில் 500 ரூபாய் பங்களிப்புத் தொகை வழங்கப்படும்.
இந்த மூன்று குடும்பங்களுக்கு வழங்கிய பின் யாரும் பாதிக்கப்படவில்லை என்றால் பணம் வசூலிக்கப்படாது என்றார்.

