ADDED : ஆக 29, 2025 05:33 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மின்கம்பத்தில் டூவீலர் மோதிய விபத்தில் இருவரும், கிழக்கு கடற்கரை சாலையில் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் மற்றும் இரு கார்கள் நேருக்கு நேர் மோதியதில் பெண்ணும் என ஒரே நாளில் 5 பேர் பலியாகினர்.
நயினார்கோவில் அருகேயுள்ள அரசடி வண்டல் கிராமத்தை சேர்ந்த குருசாமி மகன் ரூபன் ராஜ் 21. இவர் ஊரில் இருந்து நேற்று அதிகாலை 4:30 மணிக்கு ராமநாதபுரம் நோக்கி தன்னுடைய டூவீலரில் இரு நண்பர்களுடன் வந்தார். தொருவளூர் கிராமத்தை சேர்ந்த பாண்டி மகன் ஓட்டல் தொழிலாளி முருகன் 45, ஊருக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது நயினார்கோவில் ரோடுகிருஷ்ணா நகரில் இரு டூவீலர்களும் நேருக்கு நேர் மோதின.
இதில் சம்பவ இடத்திலேயே முருகன், ரூபன் ராஜ் ஆகியோர் பலியாகினர். காயமடைந்த மற்ற இருவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் பலி திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கில்பர்ட் மனைவி ரீத்தா மேரி 50, காரில் கன்னியாகுமரி சென்று விட்டு மீண்டும் ஊருக்கு நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு திரும்பிக் கொண்டிருந்தார். ராமநாதபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் மாடக்கொட்டான் கிராமம் அருகே எதிரே கடம்பூரில் இருந்து ராமநாதபுரம் நோக்கி வந்த கார் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் ரீத்தா மேரி பலியானர்.
இரு கார்களின் டிரைவர்கள் திருத்துறைப்பூண்டி பீர்முகமது 28, மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த சிவா 28, உட்பட 5 பேர் காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேணிக்கரை போலீசார் விசாரிக்கின்றனர்.
மின்கம்பத்தில் மோதி பலி கமுதி அருகே கோவில்பட்டி அருகே கழுகுமலையை சேர்ந்த கார்த்திக் 31, அபிராமத்தில் திருமணம் செய்துள்ளார். நேற்று முன்தினம் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு குடும்பத்துடன் அபிராமம் வந்துள்ளனர்.
அப்போது கார்த்திக் அவரது மாப்பிள்ளை பூமணி 25, இருவரும் கமுதிக்கு சென்று விட்டு டூவீலரில் அபிராமம் திரும்பி வந்தனர்.
கமுதி கே.நெடுங்குளம் அருகே ரோட்டோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். கமுதி அரசு மருத்துவமனையில் பரிசோதித்த போது கார்த்திக் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
பூமணி மேல் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் செல்லும் வழியில் இறந்தார்.
அபிராமம் போலீசார் விசாரிக்கின்றனர்.

