5000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்; மட்கலக் குறியீடு கண்டெடுப்பு
5000 ஆண்டு பழமையான முதுமக்கள் தாழிகள்; மட்கலக் குறியீடு கண்டெடுப்பு
ADDED : ஜூன் 27, 2026 07:01 AM

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே வலசை, மணக்குளம் கிராமங்களுக்கு நடுவில் கோயில் சுற்றுச்சுவர் கட்ட தோண்டப்பட்ட இடத்தில் 5000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்காலத்தை சேர்ந்த முதுமக்கள் தாழிகள், மட்கலக்குறியீடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
வலசை, மணக்குளம் கிராமங்களுக்கு நடுவில் அய்யனார், தர்ம முனீஸ்வரர் கோயில் உள்ளது. கோயில் வளாகத்தில் புதிதாக சுற்றுச்சுவர் கட்டுவதற்காக குழிதோண்டியுள்ளனர்.
அப்போது மண் பானையில் முதுமக்கள் தாழிகள் இருந்தது தெரிய வந்தது. அப்பகுதியைச் சேர்ந்த மாரி, வேல்முருகன் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுருவிடம் தெரிவித்தனர்.
அவற்றை ஆய்வு செய்த ராஜகுரு கூறியதாவது:
அய்யனார் கோயில் அருகில் மூன்று ஏக்கரில் முதுமக்கள் தாழிகள் புதைந்துள்ளன. சுற்றுச்சுவர் கட்ட தோண்டிய போது ஒரு தாழிக்குள் மூன்று குவளைகள், தட்டு, கிண்ணம், கும்பா, சிறிய பானை இருந்தன. கி.மு., 4000 முதல் கி.மு., 1500 வரையிலான பெருங்கற்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டு விடுவர்.
அதை மனித மாமிசம் திண்ணும் காட்டு விலங்கு, பறவைகள் இரையாக எடுத்தபின், எஞ்சி கிடக்கும் எலும்புகளை சேகரித்து அவற்றுடன் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் படையலை சிறிய முதுமக்கள் தாழியில் வைத்து மூடி அடக்கம் செய்யும் வழக்கமும், பிற்காலத்தில் பெரிய தாழிக்குள் உடலை வைத்து அடக்கம் செய்யும் முறை இருந்துள்ளது.
தாழிக்குள் இருந்த கருப்பு சிவப்பு மட்கலங்கள் அடர் வண்ணத்துடனும், வழுவழுப்பாகவும், பளபளப்பாகவும் உள்ளன. இவற்றை சுடும் போது அதன் மேல் உப்பு துாவி பளபளப்பாக ஆக்கியுள்ளனர்.
மலைப்பகுதிகளில் காணப்படும் பெருங்கற்படை சின்னங்களை விட சமவெளி பகுதிகளில் உள்ள சிறிய தாழிகள் காலத்தால் முந்தியவை என்பதால் இவை 5000 ஆண்டுகள் பழமையானவையாக இருக்கும்.
இங்கிருந்து வடக்கில் 500 மீட்டர் தொலைவில் விக்கிரமபாண்டியபுரம் ராஜா கோயில் திடல் பகுதியில் 30 ஏக்கரில் பானை ஓடு சிதறிக் கிடக்கின்றன. இதுமக்கள் குடியிருந்த பகுதியாகவும், தாழிகள் உள்ள வலசை, மணக்குளம் இடுகாடாகவும் பெருங்கற்காலத்தில் இருந்துள்ளது. தொல்லியல் துறை இப்பகுதியில் அகழாய்வு செய்தால் மேலும் பல வரலாற்று சிறப்புகள் வெளிவரும் என்றார்.
