/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
எமனேஸ்வரத்தில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு சிவன் கோயில் ஆய்வில் தகவல்
/
எமனேஸ்வரத்தில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு சிவன் கோயில் ஆய்வில் தகவல்
எமனேஸ்வரத்தில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு சிவன் கோயில் ஆய்வில் தகவல்
எமனேஸ்வரத்தில் 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுப்பு சிவன் கோயில் ஆய்வில் தகவல்
ADDED : ஏப் 30, 2025 07:35 AM

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் சிவன் கோயிலில் பாண்டியர் காலத்து 800 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தலைவர் ராஜகுரு மற்றும் மாணவர்கள் எமனேஸ்வரம் சிவன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மத்திய தொல்லியல் துறை 1914ல் பதிவு செய்த கல்வெட்டுகளை ஆய்வு செய்த போது, கோயிலின் தென் பகுதியில் கருங்கல் கல்வெட்டு இருப்பதை கண்டறிந்தனர்.
ராஜகுரு கூறியதாவது: இயமனீஸ்வரமுடையவர், மல்லிகார்ஜூனேஸ்வரர் என இரு சன்னதிகள் இங்குள்ளன. இந்த கல் மல்லிகார்ஜுனேஸ்வரர் சன்னதி கருவறை அதிட்டானத்தில் இருந்திருக்கலாம். இது 11 வரிகளைக்கொண்டு இரு துண்டுகளாக உள்ளது. இதில் எழுத்துக்கள் வெவ்வேறு அளவுகளில் உள்ளதால் வெவ்வேறு கல்வெட்டுகளின் துண்டுகளாக இருக்கலாம். ஒன்றில் கோயிலில் நடத்தப்படும் மூன்று திருநாளுக்கு இரண்டு வேலி நிலமும், மடப்புறமாக ஐந்து மா நிலமும், திருஞானம் ஓதும் ஆண்டாற்கு இரு மாவரை நிலமும் தானமாக கொடுக்கப்பட்டுள்ள தகவல் உள்ளது. கோயிலில் ஓதும் தேவாரம் போன்ற பாடல்களை திருஞானம் என்பர். வேலி, மா, மாவரை ஆகியவை நில அளவுகள் ஆகும்.
கடமை, அந்தராயம், வெட்டிப்பாட்டம், பஞ்சு பீலி, சந்து விக்கிரகப்பேரு, செக்கிறை, தண்டோலிப்பாட்டம், இடையர் வரி, இன வாயம் ஆகிய பாண்டியர் கால வரிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. இவ்வரிகளை தள்ளுபடி செய்து நிலத்தை தானமாக கொடுத்திருப்பார். ஏற்கனவே கோயிலுக்கு வழங்கப்பட்ட தேவதான நிலமும், புத்த சமண மத ஆலயங்களுக்கு வழங்கப்பட்ட பள்ளிச்சந்த நிலமும் நீக்கி உள்ள நிலமும் தானமாக கொடுக்கப்பட்டுள்ளது.
மற்றொரு கல்வெட்டில் அந்தராயம், விநியோகம் ஆகிய வரிகளின் பெயர்களும் கீழநெட்டூரான கீர்த்தி விசாலை நல்லுாரும் என வருகிறது. இது சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது.
அம்மன் சன்னதியில் உள்ள முதலாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன் கல்வெட்டு தான் இக்கோயிலில் பழமையானது என்பதால், மல்லிகார்ஜுனேஸ்வரர் சன்னதியும் அவர் காலத்தில் கட்டப்பட்டதாக கருதலாம்.
இக்கோயில் கல்லில் தான் புதிய கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் அவை கி.பி., 13 ஆம் நுாற்றாண்டு சுந்தரபாண்டியன் காலத்தை சேர்ந்ததாக கருதலாம் என்றார்.

