ADDED : மார் 07, 2026 07:54 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துாரில் இருந்து காக்கூர், கருமல், தேரிருவேலி, உத்திரகோசமங்கை வழியாக ராமநாதபுரம் செல்லும் ரோடு உள்ளது. முதுகுளத்துாரில் இருந்து ராமநாதபுரம், ராமேஸ்வரம் செல்லும் முக்கியமான ரோடு என்பதால் தினந்தோறும் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. முதுகுளத்துார் அருகே குமாரக்குறிச்சி விலக்கு ரோட்டோரத்தில் வளைவில் விபத்து ஏற்படாமல் இருப்பதற்காக கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு அலுமினியத்தால் தடுப்புவேலி அமைக்கப்பட்டுள்ளது.
பராமரிப்பு பணி செய்யப்படாததால் மணல் அரிப்பு ஏற்பட்டு தடுப்பு வேலி சாய்ந்து ரோட்டில் ஆபத்தான நிலையில் உள்ளது. அருகிலுள்ள மின்கம்பத்தில் தடுப்பு வேலி வயர் மூலம் கட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் ஒருவித அச்சத்துடனே செல்கின்றனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தடுப்பு வேலி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்தனர்.
