/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா ஆண்டாள் சன்னதியில் திருமஞ்சனம்
/
அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா ஆண்டாள் சன்னதியில் திருமஞ்சனம்
அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா ஆண்டாள் சன்னதியில் திருமஞ்சனம்
அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா ஆண்டாள் சன்னதியில் திருமஞ்சனம்
ADDED : ஜூலை 29, 2025 12:23 AM

திருப்புல்லாணி: வைணவத்தில் 12 ஆழ்வார்களில் ஒருவரான ஸ்ரீவில்லிபுத்துாரில் அவதரித்த ஆண்டாள் பிறந்த நட்சத்திரம் ஆடி மாத பூரம் என்பதால் இந்நாள் ஆண்டாள் ஜெயந்தி என்று அழைக்கப்படுகிறது.
திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் ஆண்டாள் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். ஆடிப்பூரத்தை முன்னிட்டு நேற்று காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை உற்ஸவர் ஆண்டாள் கல்யாண ஜெகநாத பெருமாள் ஆகியோருக்கு விசேஷத் திருமஞ்சனம் நடந்தது.
கோயில் பட்டாச்சாரியார்களால் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்கள், திருப்பாவை உள்ளிட்ட பாடல்கள் பாடப்பட்டன.
விசேஷ அலங்காரத்திற்கு பிறகு உள்பிரகார வீதி உலா நடந்தது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
*கீழக்கரை அருகே முள்ளுவாடியில் இலங்கை மாகாளியம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் இலங்கை மாகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. பெண்கள் லலிதா சகஸ்ரம குங்கும அர்ச்சனை, சுமங்கலி பூஜை உள்ளிட்டவைகளை செய்தனர்.
பூஜைகளை அர்ச்சகர் விஸ்வநாதன் செய்திருந்தார். பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
* சாயல்குடி பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு மூலவர் பத்ரகாளி அம்மனுக்கு 16 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர். அம்மனுக்கு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டது. தாம்பூல பிரசாதம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை சத்திரிய ஹிந்து நாடார் உறவின் முறையினர் மற்றும் கோயில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.
* சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் சமேத பவள நிற வல்லியம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு வளைகாப்பு உற்ஸவம் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு பசுக்களை முன்னிறுத்தி கோமாதா பூஜை நடந்தது. காலை 8:00 மணிக்கு மூலவர் மற்றும் உற்ஸவ மூர்த்தியான பவள நிற வல்லியம்மனுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகளுக்கு பின்னர், வளைகாப்பு சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.
அதனை தொடர்ந்து ஏராளமான பெண்கள் பங்கேற்று சுமங்கலி பூஜை செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் மற்றும் பவளம் மகளிர் குழு, மகாசபை பிரதோஷ அன்னதான கமிட்டியினர் செய்திருந்தனர்.
*பரமக்குடியில் உள்ள பெருமாள் மற்றும் அம்மன் கோயில்களில் ஆடிப்பூர விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் ஆண்டாள் தனி சன்னதியில் நின்ற திருக்கோலத்தில் உள்ளார். இங்கு நேற்று காலை 10:00 மணிக்கு அபிஷேகம் நிறைவடைந்து அலங்காரம் தீபாராதனைகள் நடந்தது.
நேற்று மாலையில் அலங்காரம் செய்யப்பட்டு பஜனைகள் நடந்தது.
*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் பெருமாள், ஆண்டாள் திருமஞ்சனம் செய்யப்பட்டு, அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது. இரவு மின் அலங்காரத்தில் பவனி வந்தனர்.
*பரமக்குடி முத்தாலம்மன் கோயிலில் அபிஷேக ஆராதனைகள் நடந்து வளையல் அலங்காரத்தில் அம்மன் அருள் பாலித்தார். அனைத்து கோயில்களிலும் பெண்கள் மற்றும் பக்தர்களுக்கு வளையல் வழங்கப்பட்டது.