/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் அருகே மூடப்படாத கேட் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்ப்பு அதிகாரிகள் விசாரணை
/
ராமநாதபுரம் அருகே மூடப்படாத கேட் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்ப்பு அதிகாரிகள் விசாரணை
ராமநாதபுரம் அருகே மூடப்படாத கேட் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்ப்பு அதிகாரிகள் விசாரணை
ராமநாதபுரம் அருகே மூடப்படாத கேட் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்ப்பு அதிகாரிகள் விசாரணை
ADDED : ஆக 17, 2025 02:03 AM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் அருகே வழுதுார் ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததை கண்டு லோகோ பைலட் மதுரை பயணிகள் ரயிலை நிறுத்தியதால் விபத்து தவிர்க்கப்பட்டது. பின் கேட் கீப்பர் ஜெய்சிங் மீனா அதை மூட ரயில் அங்கிருந்துபுறப்பட்டது. இதுகுறித்து மதுரை கோட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரத்தில் இருந்து மதுரைக்கு நேற்று காலை பாசஞ்சர் ரயில் (எண் 56712) புறப்பட்டது. அந்த ரயில் வாலாந்தரை ரயில்வே ஸ்டேஷனை கடந்து வழுதுார் ரயில்வே கேட் அருகே வந்தது. அப்போது ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்துள்ளது. ரயில் வருவதை பார்த்து ரோட்டில் வந்தவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்தி பின்னால் வந்த மற்ற வாகன ஓட்டிகளையும் எச்சரித்து நிறுத்தினர். ரயில்வே கேட் மூடப்படாததை கண்டு லோகோ பைலட்டும் உடனடியாக ரயிலை மெதுவாக இயக்கி கேட் முன்பாக நிறுத்தினார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
பின் ரயிலில் இருந்து இறங்கிய லோகோ பைலட் கேட் கீப்பர் அறைக்கு சென்றார். அப்போது அங்கு வந்த கேட் கீப்பர் ஜெய்சிங் மீனா இயற்கை உபாதையை கழிக்க சென்று விட்டதாக கூறி பிறகு கேட்டை பூட்டினார். அதற்கு பிறகு ரயில் அந்த கேட்டை கடந்து சென்றது.
இந்த சம்பவம் குறித்து மண்டபம் ரயில்வே அதிகாரிகள் ஜெய்சிங் மீனாவிடம் முதற்கட்ட விசாரணை நடத்தினர். அதில் காலை பணிக்கு வர வேண்டும் என்ற அவசரத்தால் எழுந்தவுடன் வந்து விட்டேன். பணியின் போது ரயில் வர நேரம் ஆகும் என்பதால் கழிப்பறை சென்றிருந்தேன். ரயில் வருவதற்குள் கேட் அடைப்பதற்கு கேபினுக்கு வந்து விட்டேன் எனக்கூறியுள்ளார். அடுத்தகட்ட விசாரணை மதுரை ரயில்வே கோட்ட அலுவலகத்தில் இன்று (ஆக., 17) நடக்கவுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
சில நாட்களுக்கு முன் கடலுார் அருகே ரயில்வே கேட் மூடப்படாமல் பள்ளி குழந்தைகள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. இந்நிலையில் ராமநாதபுரம் அருகே ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களில் உள்ள ரயில்வே கேட்களின் பாதுகாப்பை ரயில்வே நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.