/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரோட்டில் திரியும் கால்நடைகளால் விபத்து அதிகம் கடிவாளம் தேவை! உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம்
/
ரோட்டில் திரியும் கால்நடைகளால் விபத்து அதிகம் கடிவாளம் தேவை! உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம்
ரோட்டில் திரியும் கால்நடைகளால் விபத்து அதிகம் கடிவாளம் தேவை! உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம்
ரோட்டில் திரியும் கால்நடைகளால் விபத்து அதிகம் கடிவாளம் தேவை! உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை அவசியம்
ADDED : டிச 19, 2025 05:17 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர், புறநகர் பகுதிகளில் கால்நடைகள் காலை, இரவு என கண்டபடி ரோட்டில் திரிகின்றன. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் கண்டும் காணாதது போல உள்ளதால் வாகனவிபத்துக்களில் மனிதர்கள், கால்நடைகள் உயிரிழப்பு, காயங்கள் ஏற்படுவது தொடர்கிறது. சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்டம் நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.
மாவட்டத்தில் ராமேஸ்வரம், திருப்புல்லாணி, உத்த ரகோசமங்கை, தேவிபட்டினம் உள்ளிட்ட புனித ஆன்மிக தலங்கள், கடற்கரை சுற்றுலா தலங்கள் உள்ளன.
இவ்விடங்களுக்கு வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வாகனங்களில் வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக ராமேஸ்வரத்திற்கு அதிகளவில் வாகனங்களில் வருகின்றனர்.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், நகர், புறநகர் உட்புற சாலைகளில் ஆடு, மாடுகள், குதிரைகள் உள்ளிட்ட கால்நடைகள் ரோட்டில் திரிகின்றன. குறிப்பாக வீடுகளில் வளர்க்க வேண்டிய மாடுகளை மேய்ச்சலுக்காக ஊருக்குள் அவிழ்த்து விடுகின்றனர்.ராமேஸ்வரம்- - மதுரை ரோடு பட்டணம்காத்தான், அச்சுந்தன்வயல், ராமநாதபுரம் நகர் ரோடுகளில் ஏராளமானகால்நடைகள் உலா வருகின்றன.
கலெக்டர் அலுவலக வளாகம் ஆடுகள், மாடுகளின் மேய்ச்சல் இடமாகவே மாறிவிட்டது. கால்நடைகள்நடு ரோட்டில் வரும் போது வேகமாக வரும் வாகனங்களால் விபத்தில் சிக்கி காயமடைகின்றன. உயிர் பலியும் நடக்கிறது. தெருநாய்களுக்கு இணையாகதற்போது கால்நடைகளின் தொந்தரவும் அதிகரித்துள்ளது.
இவ்விஷயத்தில் போக்குவரத்து துறை, நகராட்சி, ஊராட்சி நிர்வாக அதிகாரிகளின் பெயரளவு நடவடிக்கையால் சம்பந்தப்பட்ட உரிமையாளர் எவ்வித அச்சமின்றி தொடர்ந்து கால்நடைகளை ரோட்டில் திரிய விடுவது வாடிக்கையாகியுள்ளது. இரவு நேரத்தில் வேகமாக வரும் வாகன ஓட்டிகள், கால்நடைகள் மீது மோதி விபத்தில் காயம் அடைந்துள்ளனர்.
சமீபத்தில் பட்டணம்காத்தான் ஊராட்சி அலுவலகம் எதிரே விபத்தில் அடிப்பட்டு கவனிப்பாரின்றி பரிதாபமாக கன்றுக்குட்டி பலியானது.
கால்நடைகளால் ஆண்டுதோறும் 30க்கு மேற்பட்ட விபத்துகள் நடக்கிறது. எனவே ரோட்டில் திரியும் கால்நடைகளை பறிமுதல் செய்யவும், அதன் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் உத்தரவிட வேண்டும்.

