/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சினிமா பைனான்சியரின் மேலாளருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகை கவுதமி மனு
/
சினிமா பைனான்சியரின் மேலாளருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகை கவுதமி மனு
சினிமா பைனான்சியரின் மேலாளருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகை கவுதமி மனு
சினிமா பைனான்சியரின் மேலாளருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகை கவுதமி மனு
ADDED : அக் 18, 2024 03:22 AM

ராமநாதபுரம், :நடிகை கவுதமியிடம் ரூ.3 கோடியே 16 லட்சம் நில மோசடி செய்த வழக்கில் சினிமா பைனான்சியர் அழகப்பனின் மேலாளர் ரமேஷ் சங்கருக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவித்து நடிகை கவுதமி ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேரில் வந்து மனு தாக்கல் செய்தார்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே சுவாத்தான் பகுதியில் 150 ஏக்கர் நிலம் வாங்கி தருவதாக காரைக்குடியை சேர்ந்த சினிமா பைனான்சியர் அழகப்பன் என்பவர் ரூ.3 கோடியே 16 லட்சம் ரூபாய் நடிகை கவுதமியிடம் பெற்றுள்ளார். செபி நிறுவனம் விற்பனைக்கு தடை செய்துள்ள பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா லிட் நிறுவனத்தின் 64 ஏக்கர் நிலத்தினை நடிகை கவுதமிக்கு எழுதிக்கொடுத்து அவரும், அவரது குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் மோசடியில் ஈடுபட்டனர்.
நடிகை கவுதமி புகாரின் பேரில் நில புரோக்கர் நெல்லியான், பிளஸிங் அக்ரோ பார்ம் இந்தியா லிட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்கள் ஜோசப் ஜெயராஜ், பாக்கியசாந்தி, ஜெயபாலன், அழகப்பனின் மேலாளர் ரமேஷ்சங்கர், கே.எம்.பாஸ்கர், விசாலாட்சி, சந்தான பீட்டர், அழகப்பனின் மனைவி நாச்சியாள், மகன்கள் சொக்கலிங்கம் அழகப்பன், அழ அழகப்பன் என்ற சிவ அழகப்பன், மகள் ஆர்த்தி அழகப்பன் உட்பட 12 பேர் மீது ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அழகப்பன் வேறு ஒரு வழக்கில் வேலுாரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவ்வழக்கில் அழகப்பனின் மேலாளர் ரமேஷ் சங்கரை சென்னையில் அக்., 3 ல் ராமநாதபுரம் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ரமேஷ் சங்கரை 2 நாள் போலீஸ் காவலில் எடுத்த போலீசார் மதுரை, கருப்பாயூரணியில் உள்ள கங்கைபுரம் 2 வது தெருவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தினர்.
இந்நிலையில் ரமேஷ் சங்கர் ராமநாதபுரம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கின் முக்கியமான பங்கு ரமேஷ் சங்கருடையது, என்பதால் ஜாமின் வழங்க கூடாது என ஆட்சேபம் தெரிவித்து நடிகை கவுதமி கோர்ட்டில் ஆஜராகி தனது வழக்கறிஞர் மூலம் மாஜிஸ்திரேட் பிரபாகரனிடம் மனு செய்தார்.
நடிகை கவுதமி தெரிவித்ததாவது: வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் நான் கருத்து தெரிவிக்க கூடாது. எனக்கு நியாயம் கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவேன். வெற்றியும் பெறுவேன் என்றார்.