ADDED : மார் 19, 2025 04:34 AM
திருவாடானை: ஆடு, மாடு, கோழிகளுக்கு குறித்த நேரத்தில் தடுப்பூசி போட வேண்டும் என்று கால்நடைத்துறையினர் தெரிவித்தனர்.
திருவாடானை தாலுகாவில் விவசாயப் பணிகள் முடிந்து விட்டதால் கால்நடை வளர்ப்பதில் விவசாயிகள் அதிக கவனம் செலுத்தத் துவங்கியுள்ளனர். இது குறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது:
கோடை காலத்தில் கால்நடைகளை அதிக நோய் தாக்கும். எனவே பராமரிப்பு முறைகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். பொதுவாக ஆடு, மாடுகளுக்கு கோமாரி, வெப்ப அயற்சி, கோழிகளுக்கு வெட்கை நோய், கழிச்சல் போன்ற தொற்று நோய்கள் தாக்கும்.
மாடு வளர்ப்பவர்கள் மாட்டு கொட்டகைகளில் தென்னை, பனை ஓலைகளை கொண்டு கூரை அமைக்க வேண்டும். கொட்டகையை சுற்றி நிழல் தரும் மரங்கள் இருக்க வேண்டும். மாடுகளை தினமும் குளிப்பாட்ட வேண்டும். கோழி வளர்ப்பவர்கள் கோழிகளுக்கு குளிர்ந்த நீரை பருக கொடுக்க வேண்டும்.
கோழிபண்ணைகளை குளிர்ச்சியாகவும், பண்ணைக்குள் குளிர்ந்த காற்று வீசும் படி அமைக்க வேண்டும். குறித்த நேரத்தில் ஆடு, மாடு, கோழிகளுக்கு தடுப்பூசி போட வேண்டும். கால்நடை மருத்துவமனைக்கு சென்று டாக்டர்கள் கூறும் அறிவுரைப் படி நடந்து கொள்ள வேண்டும் என்றனர்.