ADDED : நவ 28, 2024 05:03 AM

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே மேலமானாங்கரை கிராமத்தில் உள்ள யூனியன் கண்மாய் வரத்து கால்வாய் வழியாக கழிவுநீர் கலப்பதால் தேங்கும் தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்த முடியாத அவலநிலை உள்ளதாக விவசாயிகள் கூறினர்.
மேலமானாங்கரை கிராமத்தில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு கடலாடி ஒன்றிய கண்மாய் உள்ளது. இதன் மூலம் பருவமழை காலத்தில் தேங்கும் தண்ணீரால் 100 ஏக்கருக்கு அதிகமான விவசாய நிலங்கள் பயனடைகிறது.
பல ஆண்டுகளாக கண்மாய் துார்வாரப்படாமல் இருப்பதால் வரத்து கால்வாய்கள் மணல்மேடாகியும், சீமைக்கருவேலம் மரங்கள் வளர்ந்து புதர்மண்டியும் உள்ளது. இதனால் தேங்கும் தண்ணீரை முறையாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பருவமழை பொய்த்ததால் வறண்டு கிடந்த கண்மாய் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் தண்ணீர் தேங்கியுள்ளது. விவசாயத்திற்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்காததால் கண்மாயில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்துகின்றனர்.
கண்மாய்க்கு வரும் வரத்து கால்வாயில் கழிவுநீர் கலப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதனால் தேங்கும் தண்ணீரை கூட பயன்படுத்த முடியாத நிலை உருவாகிறது. சில விவசாயிகள் தாமாக முன்வந்து வரத்து கால்வாயில் கழிவுநீர் கலக்காமல் இருப்பதற்காக வரத்து கால்வாயை அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதே நிலை தொடர்ந்தால் மேலமானாங்கரை கிராமத்தை சுற்றியுள்ள விவசாய நிலங்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும். கண்மாயை துார்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.