/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
நெற்பயிரில் சத்து குறைபாட்டை போக்க வேளாண்துறை அறிவுரை
/
நெற்பயிரில் சத்து குறைபாட்டை போக்க வேளாண்துறை அறிவுரை
நெற்பயிரில் சத்து குறைபாட்டை போக்க வேளாண்துறை அறிவுரை
நெற்பயிரில் சத்து குறைபாட்டை போக்க வேளாண்துறை அறிவுரை
ADDED : டிச 01, 2024 07:03 AM
முதுகுளத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக முதுகுளத்துார் தாலுகாவில் நெற்பயிரில் ஏற்பட்டுள்ள சத்து குறைபாட்டை போக்குவதற்கு உரங்கள் பயன்படுத்தி நிவர்த்தி செய்யலாம் என்று வேளாண் உதவி இயக்குனர் கேசவராமன் கூறினார்.
முதுகுளத்துார் வட்டாரத்திற்கு உட்பட்ட செல்வநாயகபுரம், கீரனுார், காக்கூர், குமாரக்குறிச்சி, ஏனாதி, வெண்ணீர்வாய்க்கால், சித்திரங்குடி, கீழத்துாவல், மரவெட்டி உட்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் மானாவாரியாக நடப்பு ஆண்டில் 20 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமாக நெல் விவசாயம் செய்துள்ளனர்.
மழையால் நெற்பயிர்கள் வளரத் துவங்கியுள்ளது. நெற்பயிர்களுக்கு சமமாக களைகள் வளர்ந்துள்ளதால் களைக்கொல்லி மருந்து அடித்தல், உரமிடுதல் உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டுகின்றனர். முதுகுளத்துார் அருகே ஏனாதி, கூவர்கூட்டம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மஞ்சள் பழுப்பு நோய் தாக்கம் ஏற்பட்டு பயிர்கள் வீணாகிறது.
இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக முதுகுளத்துார் வேளாண் துறை உதவி இயக்குனர் கேசவராமன் நேரில் ஆய்வு செய்தார். அவர் கூறியதாவது:
முதுகுளத்துார் வட்டாரத்தில் அக்.,ல் போதிய மழை கிடைக்காததால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் பயிர்கள் வளர்ச்சி உச்ச நிலையை அடைந்துள்ளது. தற்போது வானிலை மந்தமாக உள்ளது.
பயிர்களுக்கு மிகவும் அத்தியாவசியமான சில நுண்ணுாட்ட சத்துக்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் நெற்பயிர் இலைகள் செந்நிறமாக வெளுத்து காணப்படுகிறது. இதற்கு துத்தநாகம் என்று சத்து குறைபாடாக தெரிகிறது.
இதனை சரி செய்ய விவசாயிகள் துத்தநாக சல்பேட் உரம் ஏக்கருக்கு 10 கிலோ வீதம் அல்லது நெல் நுண்ணுாட்ட உரம் ஏக்கருக்கு 5 கிலோ வீதம் மக்கிய குப்பை அல்லது போதிய மணலுடன் வயல் முழுவதும் துாவலாம். இதன் மூலம் செந்தாழை நோய் எனப்படும் நுண்ணுாட்ட சத்து குறைப்பாட்டை சரி செய்யலாம்.
நெல் நுண்ணுாட்ட கலவை, துத்தநாக சல்பேட் உரங்கள் வேளாண் விரிவாக்கம் மையத்தில் மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனை பயன்படுத்தி விவசாயிகள் நெற்பயிரில் காணப்படும் சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்யலாம் என்றார்.