/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சிவன் கோயில்களில் ஆனி திருமஞ்சனம்
/
சிவன் கோயில்களில் ஆனி திருமஞ்சனம்
ADDED : ஜூலை 02, 2025 11:33 PM

ராமநாதபுரம்: ஆனி திருமஞ்சனத்தை முன்னிட்டு ராமநாதபுரத்தில் உள்ள சிவன் கோயில்களில் நடராஜருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் சிவாலயங்களில் நடராஜரின் ஆனந்தத் தாண்டவத்தைக் கொண்டாடும் விதமாக பூஜை நடத்தப்படுகிறது.
ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று சிவன் கோயில்களில் உள்ள நடராஜர் சன்னதியில் ஆனி திருமஞ்சனம் கொண்டாடப்படுகிறது.
நேற்று இவ்விழாவில் ராமநாதபுரத்தில் உள்ள மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் உள்ள நடராஜர், சிவகாமி அம்மனுக்கு அபிேஷகங்கள், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.
இதே போன்று ராமநாதபுரம் வெளிபட்டணம் சவுபாக்கியநாயகி ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகருக்கு அபிேஷகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர்.
*உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் ஆனித் திருமஞ்சன விழா நடந்தது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நிறைவடைந்த உடன் உற்ஸவமூர்த்தி நடராஜர், சிவகாமி அம்மனை மரகத நடராஜரின் சன்னதி முன்பாக அமைக்கப்பட்ட அலங்கார மேடைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு உற்ஸவமூர்த்திகளுக்கு 32 வகையான அபிஷேக அலங்கார தீபாராதனைகள் தொடர்ந்து நடந்தது. காலை 7:00 மணிக்கு பூஜைகள் நிறைவடைந்தது. ஆனி மாதம் உத்தர நட்சத்திரத்தில் நடத்தப்படும் ஆனித் திருமஞ்சனம் சிறப்பு வாய்ந்தது.
குறிப்பாக ஆனி மாத உத்திர நட்சத்திரமும், மார்கழி மாத திருவாதிரை நட்சத்திரத்திலும் செய்யப்படும் அபிஷேகங்கள் சிறப்பு வாய்ந்தவை ஆகும்.
உற்ஸவமூர்த்திக்கு நடந்த அபிஷேக அலங்கார தீபாராதனைகளை காண்பதற்காக ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் சுவாமி தரிசனம் செய்தனர். கயிலாய வாத்தியம் முழங்கப்பட்டது.
இரவு 8:00 மணிக்கு வழக்கம் போல் பள்ளி அறை பூஜை நடந்தது.
பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
*பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தைச் சேர்ந்த விசாலாட்சிஅம்பிகா சந்திரசேகர சுவாமி (ஈஸ்வரன்)கோயில் உள்ளது. இங்கு சிவகாம சுந்தரி நடராஜமூர்த்தி தனிச் சன்னதியில் எழுந்தருளி உள்ளார். இங்கு நேற்று உற்ஸவமூர்த்திக்கு ஆனி திருமஞ்சனம் எனப்படும் அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து காலை 6:00 மணிக்கு சிறப்பு ஹோமங்கள் நடந்து அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டது. இந்த நாளில் சிவபெருமானை வழிபடுவதால் கூடுதல் பலன் கிடைக்கும் என நம்பப்படுகிறது.
எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையவர் கோயில், நயினார்கோவில் நாகநாத சுவாமி உள்ளிட்ட சிவன் கோயில்களில் நடராஜருக்கு அபிஷேகம் நடந்தது.
பரமக்குடி அருகே பெருங்கரை அட்டாள சொக்கநாதர், அங்கையற்கண்ணி மீனாட்சிக்கு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.