/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சுருக்கு மடியில் மீன் பிடிக்க துணை போகும் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க வலியுறுத்தல்
/
சுருக்கு மடியில் மீன் பிடிக்க துணை போகும் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க வலியுறுத்தல்
சுருக்கு மடியில் மீன் பிடிக்க துணை போகும் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க வலியுறுத்தல்
சுருக்கு மடியில் மீன் பிடிக்க துணை போகும் அதிகாரிகள் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரிக்க வலியுறுத்தல்
ADDED : பிப் 04, 2025 05:08 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் தடையை மீறி சுருக்குமடி, சிலிண்டர் பொருத்தி மீன்பிடிப்பதற்கு சில மீன்வளத்துறை அதிகாரிகள் உதவுவதால் அவர்கள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுக்குமாறு கரைவலை நாட்டு படகு மீனவர்கள், கடல் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியது.
மன்னார் வளைகுடா கடற்கரையில் 30 கிராமங்களை சேர்ந்த நாட்டுப்படகு மீனவர்கள் சிறு தொழிலாக பாரம்பரிய முறைப்படி மீன் பிடிக்கின்றனர். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், மண்டபம், கீழமுந்தல், துாத்துக்குடி, வேம்பார் ஆகிய இடங்களை சேர்ந்த மீனவர்கள் விதிகளை மீறி சுருக்குமடி வலைகள் மற்றும் சிலிண்டர் பொருத்தி மீன் பிடிக்கின்றனர்.
இதனை கண்டுகொள்ளாத மீன்வளத்துறை அதிகாரிகளை கண்டித்து கலெக்டர் அலுவலகத்தில் கடல் தொழிலாளர் சங்க மாவட்டச்செயலாளர் கருணாமூர்த்தி, ராமேஸ்வரம் தீவு கரைவலை, நாட்டுப்படகு, சிறுதொழில் மீனவர் சங்கம் தலைவர் உமையவேல் தலைமையில் மீனவர் கிராம மக்கள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங்காலோனிடம் மனு அளித்தனர்.
கருணாமூர்த்தி கூறியதாவது: மண்டபம் விசைப்படகுகள் அரசின் சட்ட விதிமுறைகளை மீறி தெற்கு, வடக்கு கடற்கரையில் மீன் பிடிப்பதை தடுக்க வேண்டும். பாம்பன், மண்டபம் விசைப் படகுகளில் சுருக்குமடி மீன்பிடிப்பு, சிலிண்டர் பொருத்தி மீன்பிடிப்பதை தடுக்க பலமுறை புகார் அளித்தும் மீன்வளத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதனால் தான் இலங்கை கடற்படையால் நம் மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். மீனவளத்துறையில் சிலர் பணம் வாங்குவதால் இரட்டை மடி மீன்பிடிப்பு தொடர்கிறது. எனவே லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்த வேண்டும். மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் மாதந்தோறும் குறைதீர் கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும் என்றார்.

