/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பிள்ளையார்குளத்தில் மத நல்லிணக்க அரக்காசு அம்மா தர்கா கந்துாரி விழா
/
பிள்ளையார்குளத்தில் மத நல்லிணக்க அரக்காசு அம்மா தர்கா கந்துாரி விழா
பிள்ளையார்குளத்தில் மத நல்லிணக்க அரக்காசு அம்மா தர்கா கந்துாரி விழா
பிள்ளையார்குளத்தில் மத நல்லிணக்க அரக்காசு அம்மா தர்கா கந்துாரி விழா
ADDED : செப் 28, 2024 06:00 AM

சாயல்குடி : சாயல்குடி அருகே பிள்ளையார்குளம் கிராமத்தில் அரக்காசு அம்மா தர்காவில் கந்துாரி விழா நடந்தது.
புரட்டாசி இரண்டாவது வெள்ளிக்கிழமையில் ஒவ்வொரு ஆண்டும் அரக்காசு அம்மா தர்காவில் கந்துாரி விழா கொண்டாடப்படுகிறது. கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு நுாறுக்கும் மேற்பட்ட கிடாக்கள், சேவல்கள் நேர்த்திக்கடன் விடப்பட்டது.
ஆட்டுக்கிடா, சேவல்கள் பலியிடப்பட்டு தனித்தனி அண்டாக்களில் சமையல் செய்யப்பட்டு மாலை 5:00 மணி முதல் இரவு 11:30 மணி வரை தொடர்ச்சியாக அன்னதானம் வழங்கப்பட்டது.
காலை 9:00 முதல் இரவு 8:00 மணி வரை சாயல்குடி பெரிய பள்ளிவாசல் ஆலீம்சா பஷீர் அகமது, முகம்மது யூனுஸ் கான் யாசின், உலக நன்மைக்கான பாத்தியா ஓதினர்.
ராமநாதபுரம், துாத்துக்குடி, திருச்சி, மதுரை, கோவை மாவட்டங்களில் இருந்தும், சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். அரக்காசு அம்மா புனித மக்பாராவில் பச்சை போர்வை போர்த்தப்பட்டு மல்லிகை சரங்களால் அலங்கரிக்கப்பட்டு வாசனை திரவியங்கள் தெளிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு பொட்டுக்கடலை, சர்க்கரை, பேரிச்சம்பழம் கலந்து பிரசாதமாக வழங்கப்பட்டது.
விழாக்குழுவினர் கூறியதாவது: ஐந்து தலை முறைகளாக அரக்காசு அம்மா வழிபாடு செய்து வருகிறோம். ஹிந்து, முஸ்லிம் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக இவ்விழா ஆண்டிற்கு ஒருமுறை கொண்டாடப்படுகிறது.
பக்தர்கள் கோரிக்கை நிறைவேறியதும் நேர்த்திக்கடனாக விடும் ஆட்டு கிடாக்கள் மற்றும் சேவல்களை பலியிட்டு அசைவ அன்னதானம் வழங்கப்படுகிறது. பாரம்பரிய மிக்க விழாவை கொண்டாடுவதில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றனர். இரவில் வள்ளி திருமணம் நாடகம் நடந்தது.
ஏற்பாடுகளை பிள்ளையார்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.