ADDED : அக் 09, 2025 04:39 AM
ராமநாதபுரம் : வேலு மனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லுாரியில் செயற்கை நுண்ணறிவு குறித்த முதலாவது அறிவியல் கண்காட்சி நேற்று நிறைவடைந்தது. நிறைவு விழாவில் கல்லுாரி தாளாளர் வேலு மனோகரன் தலைமை வகித்தார். செயலாளர் சகுந்தலா பார்த்தசாரதி வாழ்த்தி பேசினார்.
சிறப்பு விருந்தினராக சென்னை ராஜலட்சுமி தொழில்நுட்பக் கல்லுாரி கணினி அறிவியல் துறை தலைவர் நெடுஞ்செழியன் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு உலகை ஆட்கொண்டுள்ள இன்றைய காலச் சூழலில் மாணவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். சமூக நலனுக்குப் பயன்படும் நவீன கண்டுபிடிப்புகளை உருவாக்க முன்வரவேண்டும் என்றார்.
கண்காட்சியில் கல்லுாரி மாணவிகள் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு, மனித இயந்திரங்கள் உள்ளிட்ட அறிவியல் செயல்திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தொடர்ந்து செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி விளையாட்டுகள் நடந்தன. ராமநாதபுர மாவட்ட பள்ளி மாணவிகள் இதில் கலந்து கொண்டனர்.