/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் ஒருவர் காயம்
/
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் ஒருவர் காயம்
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் ஒருவர் காயம்
இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் ஒருவர் காயம்
ADDED : ஜூலை 12, 2025 01:32 AM
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் மீது அந்நாட்டு கைதிகள் தாக்கியதில் ஒருவர் காயம் அடைந்தார். இதனை கண்டித்து தமிழக மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
ஜன., முதல் மார்ச் வரை மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், நாகை மீனவர்களை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து யாழ்ப்பாணம், வவுனியா சிறையில் அடைத்தனர். இதில் படகு உரிமையாளர்கள், டிரைவர்கள் 29 பேரை தவிர மற்ற மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த 29 மீனவர்களுக்கு ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை இலங்கை நீதிமன்றம் தண்டனை விதித்ததும், அந்நாட்டு விதிமுறைப்படி மீனவர்களை மொட்டை அடித்து கொழும்பு வெலிக்கடை சிறையில் அடைத்தனர்.
இச்சிறையில் 95 சதவீதம் பேர் சிங்கள மொழி பேசும் கைதிகள் உள்ளதால் தமிழக மீனவர்களை வேறுபடுத்தி பார்த்தனர். இதனால் தமிழக மீனவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்து கேலி செய்தனர். ஒருகட்டத்தில் மீனவர்களை சரமாரியாக தாக்கி உள்ளனர்.
இதில் ஜெகதாப்பட்டினம் மீனவர் ஒருவர் காயமடைந்து சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இச்சம்பவம் தமிழக மீனவர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் கார்ல் மார்க்ஸ் கூறியதாவது :
இலங்கையில் இனப்போர் மூள வெலிக்கடை சிறை சம்பவம் தான் முக்கிய காரணம். அதே போல் தற்போது தமிழக மீனவர்களை வேறுபடுத்தி அந்நாட்டு கைதிகள் தாக்கி சித்திரவதை செய்கின்றனர். இச்சம்பவம் நீடித்தால் தமிழக மீனவர்களுக்கு விபரீதம் ஏற்படக்கூடும்.
எனவே மத்திய அரசு தலையிட்டு தமிழக மீனவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.