/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கால்வாய் ஆக்கிரமிப்பால் - தண்ணீர் செல்வதற்கு வழி இல்லையே: ; ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
/
கால்வாய் ஆக்கிரமிப்பால் - தண்ணீர் செல்வதற்கு வழி இல்லையே: ; ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
கால்வாய் ஆக்கிரமிப்பால் - தண்ணீர் செல்வதற்கு வழி இல்லையே: ; ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
கால்வாய் ஆக்கிரமிப்பால் - தண்ணீர் செல்வதற்கு வழி இல்லையே: ; ஆக்கிரமிப்பை அகற்ற விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : அக் 06, 2025 04:07 AM

ராமநாதபுரம் : மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் கண்மாய்களுக்கான இணைப்பை கால்வாய்கள் துார்வாராமல், ஆக்கிரமித்து உள்ளதால் தண்ணீரை சேமிக்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தின் தண்ணீர் தேவைக்கு மட்டுமின்றி விவசாய தேவைக்கும் அதிகம் கை கொடுப்பது கண்மாய்கள் தான். பெரும்பாலும் ஒரு கண்மாயில் இருந்து மற்றொரு கண்மாய்க்கு இணைப்பு இருக்கும். ராமநாதபுரத்தில் உள்ள 755 பஞ்சாயத்து யூனியன் கண்மாய்கள், 477 ஜமீன் கண்மாய்கள், 335 வைகை இணைப்பு கண்மாய்கள், 27 மணிமுத்தாறு இணைப்பு கண்மாய்கள், 140 குண்டாறு இணைப்பு கண்மாய்கள் மாவட்டத்தின் நீர்தேவையை பூர்த்தி செய்கின்றன.இந்த கண்மாய்களுக்கான இணைப்பை முறையாக பராமரிக்காததால் மழைக்காலங்களில் மழைநீரை தேக்கி வைக்க முடியாமல் வீணாகிறது. கடந்த ஆண்டு ராமநாதபுரத்தில் மட்டும் 1022 மி.மீ., மழை பெய்துள்ளது. அதே நேரத்தில் முறையாக தண்ணீரை சேமித்து வைக்காததால் பெரும்பாலான கண்மாய்கள் வறண்டு காட்சியளிக்கின்றன. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் கண்மாய்களுக்கான இணைப்பை துார்வாராமல், ஆக்கிரமித்து உள்ளதால் தண்ணீரை சேமிக்க முடியாமல் போகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து சேலுாரைச் சேர்ந்த சுஜித் கூறியதாவது: எட்டிவயல் கண்மாயில் தண்ணீர் நிரம்பிய உடன் அதிலிருந்து கருங்குளம் கண்மாய்க்கு தண்ணீர் செல்லும். உத்தரகோசமங்கை விலக்கு அருகே உள்ள கடையில் வாகனங்களை நிறுத்துவதற்காக அதில் மணல் நிரப்பியுள்ளனர். இதனால் தண்ணீர் செல்லும் பாதை முழுவதும் அடைபட்டுள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். விரைவில் பருவமழை தொடங்கவுள்ளது. கருங்குளம், அச்சுங்குடி, கொத்தன்குளம் உள்ளிட்ட கிராமங்களில் பருமழையை நம்பி தான் விவசாயம் செய்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மழை தொடங்கும் முன்பு ஆக்கிரமிப்புகளை அகற்றி, அனைத்து கால்வாய்களையும், தண்ணீர் செல்லும் வழித்தடத்தை துார்வாரி சரிசெய்ய வேண்டும் என்றார். --