/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போலீசார் பொய் வழக்கு போடுவதாக பா.ஜ., புகார்
/
போலீசார் பொய் வழக்கு போடுவதாக பா.ஜ., புகார்
ADDED : ஜன 05, 2025 05:34 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் போலீசார் பொய் வழக்கில் பா.ஜ., நிர்வாகியை கைது செய்துள்ளதால் கண்டித்து தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என மாவட்டத் தலைவர் தரணி முருகேசன் தெரிவித்தார். அவர் கூறியதாவது:
அண்ணா பல்கலையில் நடந்த பாலியல் பிரச்னையை கண்டித்து பா.ஜ., சார்பில் மதுரையில் இருந்து மகளிர் அமைப்பினர் சென்னை வரை நீதிகேட்டு பயணம் செய்யும் போராட்டம் நேற்று முன் தினம் நடத்தப்பட்டது.
இதில் பங்கேற்க மகளிர் அமைப்பினருடன் நான் உட்பட பா.ஜ., நிர்வாகிகள் கேணிக்கரை சந்திப்பில் வழியனுப்ப வந்திருந்தோம்.
அங்கு வந்த கேணிக்கரை போலீசார் எங்களை கைது செய்வதாக தெரிவித்தனர்.
என்னையும் சேர்த்து 8 பேரை வாகனத்தில் ஏற்றினர். கைது செய்யப்பட்டவர்களில் மாற்றுத்திறனாளியான முதுகெலும்பு பாதிக்கப்பட்ட முன்னாள் ராணுவ வீரர் சண்முகநாதனை பெண் எஸ்.ஐ., யை பலாத்காரம் செய்ய முயன்றதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் பொய் வழக்கு பதிந்து அவரை போலீஸ் ஸ்டேஷனில் அடித்து டார்ச்சர் செய்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் அதிகாரிகளிடம் பல முறை எடுத்துக்கூறியும் பிடிவாதமாக வழக்குப்பதிந்துள்ளனர்.
தி.மு.க., வின் கைக்கூலிகளாக போலீசார் செயல்படுகின்றனர். இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகள் மீது நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.
தலைமையிடம் கலந்து ஆலோசனை செய்து தவறு செய்த போலீஸ் அதிகாரிகள் தண்டனை பெறும் வரை பா.ஜ., வினர் தொடர் போராட்டங்களை நடத்துவோம் என்றார்.
இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., சந்தீஷ் கூறுகையில் போலீசாரிடம் வீடியோ ஆதாரம் உள்ளது. இதற்காக கேணிக்கரை போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

