/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் பா.ஜ., திமுகவினர் ரகளை...
/
ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் பா.ஜ., திமுகவினர் ரகளை...
ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் பா.ஜ., திமுகவினர் ரகளை...
ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் பா.ஜ., திமுகவினர் ரகளை...
ADDED : ஜூலை 26, 2025 03:36 AM

ராமநாதபுரம் நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் கார்மேகம் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் பிரவின் தங்கம், கமிஷனர் அஜீதா பர்வீன் முன்னிலை வகித்தனர். கூட்டம் சரியாக காலை 10:30 மணிக்கு தொடங்கியதும் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
அப்போது தி.மு.க., கவுன்சிலர் அய்யனார் புதிதாக கட்டப்படும் ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்ட் கடைகள் ஒதுக்குவதில் முறைகேடு நடந்துள்ளது. அது சம்பந்தமான தீர்மானத்தை நிறுத்திவைக்க வேண்டும் என்றார். அதற்கு உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவிக்க அவர் வெளிநடப்பு செய்தார்.
அதைத் தொடர்ந்து பா.ஜ., கவுன்சிலர் குமார் இதே கோரிக்கையை முன்வைத்தார். மற்ற கவுன்சிலர்கள் அவர் பேசுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் பா.ஜ., தி.மு.க., கவுன்சிலர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கூட்டம் ஆரம்பித்து எந்த விவாதமும் நடைபெறாமல் 36 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு 5 நிமிடத்தில் கூட்டம் நிறைவடைந்தது.
வெளிநடப்பு செய்த தி.மு.க., கவுன்சிலர் அய்யனார் கூறியதாவது: ராமநாதபுரம் புதிய பஸ்ஸ்டாண்ட் கடைகள் ஒதுக்கியதில் முறைகேடு நடந்திருப்பதாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தேன். அதை விசாரித்த நீதிபதிகள் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கக் கூடாது என உத்தரவிட்டனர். ஆனால் வணிகர்கள், பொது மக்களிடம் மனுக்கள் பெறாமல் வேண்டியவர்களுக்கு கடைகள் ஒதுக்கியுள்ளனர். இதில் பெரிய முறைகேடு நடந்துள்ளது. இந்த டெண்டரை ரத்து செய்து மீண்டும் டெண்டர் நடத்த வேண்டும்.
நகராட்சி கூட்டத்தில் இது குறித்து கேட்டால் சரியாக பதில் அளிக்கவில்லை என்றார்.
பா.ஜ., கவுன்சிலர் குமார் கூறியதாவது: கட்டப்பட்ட 99 கடைகளுக்கு ஜூலை 17ல் டெண்டர் நடந்தது. அதற்கு முந்தைய இரு நாட்கள் நகராட்சி அலுவலகத்தில் கமிஷனர், எழுத்தர் என எந்த அலுவலர்களும் இல்லை. ஆனால் 162 பேருக்கு டி.டி., வாங்கி டெண்டர் நடந்துள்ளது. அவர்களுக்கு டி.டி., எங்கு வாங்கப்பட்டது. நுாற்றுகணக்கானோர் டெண்டரில் கலந்து கொள்ள டி.டி. வழங்க முடியாமல் இருநாட்கள் காத்திருந்தனர்.
குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தனியார் ஓட்டலில் வைத்து டோக்கன் கொடுத்து டெண்டரில் கலந்து கொள்ள அனுமதித்துள்ளனர். இதில் கவுன்சிலர்களின் குடும்பத்தினருக்கு கடை ஒதுக்கப்பட்டுள்ளது.
முறைகேடாக நடந்த டெண்டரை ரத்து செய்து ஜனநாயக முறைப்படி நடத்த வேண்டும். நகராட்சியில் இது சம்பந்தமாக கேட்டால் தலைவர் பதில் அளிக்காமல் உறுப்பினர்களை விட்டு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
அது போல் கூட்டத்தில் முறையாக விவாதம் நடத்தாமல் தீர்மான எண்ணை மட்டும் வாசித்துவிட்டு தீர்மானத்தை நிறைவேற்றுகின்றனர். 2022 முதல் தற்போது வரை நடந்த அனைத்து பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும். ராமநாதபுரம் நகராட்சியில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது என்றார்.