/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடியில் கருப்பட்டி காய்ச்சும் தொழில் மும்முரம்: சீசன் துவங்கியதால் விலை குறைய வாய்ப்பு
/
சாயல்குடியில் கருப்பட்டி காய்ச்சும் தொழில் மும்முரம்: சீசன் துவங்கியதால் விலை குறைய வாய்ப்பு
சாயல்குடியில் கருப்பட்டி காய்ச்சும் தொழில் மும்முரம்: சீசன் துவங்கியதால் விலை குறைய வாய்ப்பு
சாயல்குடியில் கருப்பட்டி காய்ச்சும் தொழில் மும்முரம்: சீசன் துவங்கியதால் விலை குறைய வாய்ப்பு
ADDED : மார் 18, 2025 06:50 AM

சாயல்குடி: பதனீர் சீசன் துவங்கியுள்ளதால் ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி, அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கருப்பட்டி தயாரிக்கும் தொழிலில் பலர் ஈடுபட்டுள்ளனர். இதனால் இனிவரும் நாட்களில் கருப்பட்டி விலை குறையும் வாய்ப்பு உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில் அதிகளவு பனை மரங்கள் ரியல் எஸ்டேட்டுகளுக்காக வெட்டி அழிக்கும் நிலை தொடர்கிறது. பனைவெல்லம் கூட்டுறவு வாரியம் உரிய முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தற்போது பனை மரத்தில் இருந்து பதநீர் எடுத்து கருப்பட்டி காய்ச்சும் தொழிலை பனைத் தொழிலாளர்கள் குடும்பத்துடன் செய்து வருகின்றனர். பனைமரக் காடுகள் நிறைந்த பகுதிகளில் பனை ஓலையால் குடிசை அமைத்து அவற்றுள் பதநீர் மூலம் கருப்பட்டி காய்ச்சும் தொழில் தற்போது மும்முரமாக நடக்கிறது.
சாயல்குடியை சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் கூறியதாவது: காவாகுளம், மேலக்கிடாரம், கீழக்கிடாரம், பூப்பாண்டியபுரம், மூக்கையூர், கன்னிகாபுரி, சாயல்குடி, நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் பனை மரங்கள் அதிகளவு உள்ளன.
இத்தொழிலை நம்பி பல ஆயிரம் குடும்பங்கள் உள்ளனர். மேலும் பல ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் பயனடைகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் கருப்பட்டிகள் மதுரை, சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களுக்கும், வெளி நாடுகளுக்கும் உரிய முறையில் பேக்கிங் செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் சேகரிக்கப்படும் பதநீரை கொண்டு கருப்பட்டி காய்ச்சப்படுகிறது.
ஒரு குடம் பதனீருக்கு 3 கிலோ கருப்பட்டி கிடைக்கும். தற்போது ஒரு கிலோ கருப்பட்டி ரூ. 250 முதல் 280 வரை விற்கப்படுகிறது. சீசன் துவங்கியுள்ளதால் கருப்பட்டி விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. மருத்துவ குணம் வாய்ந்த கருப்பட்டியை பயன்படுத்துவது, சமீப காலமாக அதிகரித்துள்ளது.
இதன் மகத்துவம் அறிந்து உணவுகளில் பெரும்பாலானோர் பயன்படுத்த துவங்கியுள்ளனர். போலி மற்றும் கலப்பட கருப்பட்டியை பயன்படுத்துவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே தரமான கருப்பட்டியை பயன்படுத்த உரிய முறையில் பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தினர் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றனர்.