/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக உடல் தானம்
/
மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக உடல் தானம்
ADDED : ஜூலை 29, 2025 12:29 AM

திருவாடானை: உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்த ஐந்திணை மக்கள் கட்சி பொறுப்பாளர் உடல் மருத்துவ மாணவர்களின் படிப்புக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு உடல் தானம் செய்யப்பட்டது.
திருவாடானை அருகே அறுநுாற்றிவயல் கிராமத்தை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் 53. ஐந்திணை கட்சியின் மாநில இணை ஒருங்கிணைப்பாளராக பதவி வகித்தார். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.
ஸ்டீபன்ராஜுக்கு ரத்த அழுத்தம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தார்.
இந்நிலையில் ஸ்டீபன்ராஜ் உடல் மிகவும் மோசமடைந்தது. இதனால் தனது குடும்பத்தாரை அழைத்து நான் இறந்தால் உடலை எரிக்கவோ, புதைக்கவோ கூடாது.
உடலும், உடல் உறுப்புகளும் பொதுமக்களுக்கு அல்லது மருத்துவதுறைக்கு பயன்பட வேண்டும் என்று தனது கடைசி ஆசையை தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஸ்டீபன்ராஜ் இறந்தார். அதனை தொடர்ந்து அவரது உடல் அறுநுாற்றிவயலுக்கு கொண்டு வரப்பட்டு மக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது ஆசைப்படி நேற்று ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு உடல் தானம் செய்யப்பட்டது.
மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருவதால் மாணவர்கள் உடற்கூறு பயிற்சி பெறுவதற்கான உடல் தானம் தேவையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்டீபன்ராஜ் உடல்தானம் செய்ததை அனைவரும் பாராட்டினர்.